உ.பி.: மாஜி எம்பி 'தாதா' அத்திக் அகமது பிரஸ் மீட்டில் சுட்டுக் கொலை- 75 மாவட்டங்களிலும் 144 தடை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்பியும் நிழல் உலக தாதாவுமான ஆதிக் அகமது என்ற அத்திக் அகமது நேற்று இரவு பிரஸ்மீட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலம் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த அத்திக் அகமது, அம்மாநில போலீசாருக்கு சவால்விட்ட பிரபல தாதா. ஒட்டுமொத்த குடும்பமும் நிழல் உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தின் மீது மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுவும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என வழக்குகள் பட்டியல் நீண்டது.

நிழல் உலக சாம்ராஜ்யம் மூலம் அத்திக் அகமது குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ1,000 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி மட்டுமே ரூ11,000 கோடி சொத்துகள் அத்திக் குடும்பத்துக்கு இருக்கிறதாம். அத்திக் முன்னாள் எம்பி.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூ பால் 2005-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். ராஜூ பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அத்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்ப்கில் அத்திக் மகன் ஆசாத் அகமதுவும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலைக்கு ரூ5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ஆசாத் அகமது சில நாட்களுக்கு முன்னர் போலீஎஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆசிக் அகமதுவின் இறுதி சடங்கில் அத்திக் அகமது பங்கேற்றார். பின்னர் நேற்று பிரக்யாராஜ் நீதிமன்றத்துக்கு அத்திக் அகமது அழைத்துவரப்பட்டார். அப்போது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அத்திக் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் எங்கிருந்தோ சரமாரியாக பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டுகள் அத்திக் அகமதுவை அந்த இடத்திலேயே சரிய வைத்தது. அவரது சகோதரர் அஷ்ரப்பும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்திக் அகமது, அஷ்ரப் ஆகியோரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? அல்லது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது. தற்போதைய நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதியத்யநாத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications