அடேங்கப்பா.. உபரி வருவாயில் உச்சம் தொட்ட உ.பி! சாதனைகளை பட்டியலிட்ட யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் புதிய நம்பிக்கையாக பாஜக ஆட்சி இருப்பதாகவும் இந்த ஆட்சியில் பாஜக உபரி வருவாயை அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத்தை விட வேறு சில முதலமைச்சர்கள் நீண்ட காலம் இந்த பொறுப்பு வகித்து வந்திருந்தாலும், அவர்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்ததில்லை. யோகி ஆதித்யநாத் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் பாஜக ஆட்சியின் கீழ் பல்வேறு வளர்ச்சிகளை எட்டியிருக்கிறது. அதில் மிக முக்கியமானது வருவாய் அதிகரிப்புதான். ஆம் இன்று உத்தரப் பிரதேசம் வருவாய் உபரி கொண்ட மாநிலமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலத்தில் போதிய வருவாய் இருக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த அரசு கோவிட் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் சிறப்பாக சமாளித்து வந்திருக்கிறது. பல்வேறு நாடுகள் இன்று கோவிட் நெருக்கடியிலிருந்து மீளாமல் தவித்து வருகின்றன நிலையில், ஒரு மாநிலமாக உத்தரப் பிரதேசம் மிக சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு அடுத்த ஆண்டு அதாவது 2021-2022ம் ஆண்டு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16 சதவிகிதமாக இருந்தது. இது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி அளவை விட அதிகமாகும். அதேபோல இதே ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.19.16 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும். இதற்கு அடுத்த ஆண்டான 2022-23ல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 17.7% ஆக அதிகரித்தது. மேலும், 2023-2024ம் ஆண்டு இது 19 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-23ம் ஆண்டில் மாநிலத்தின் வரி வருவாய் இலக்கு ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், வருவாய் ரூ.12 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கலால் வரி வருவாய் ரூ.49 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு சிறப்பு செய்தி என்னவெனில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் மீதான வாட் வரி நமது மாநிலத்தில்தான் மிகவும் குறைவாக இருக்கிறது. அதேபோல ஏற்றுமதியும் ரூ.88,000 கோடியில் இருந்து ரூ.1.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆக எல்லா பக்கங்களிலும் நீடித்த நிலையான வளர்ச்சியை உத்தரப் பிரதேசம் எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications