வேகமாக வளர்ச்சியடையும் உ.பி.. அரசு அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு! முழுவீச்சில் களமிறங்கிய யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவை மேலும் விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பகுதிகளில் புதியதாக சொத்துக்களை வாங்குபவர்களுக்கு உடனடியாக பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் லக்னோவை சுற்றியுள்ள பகுதிகள், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதிகளில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பத்திரப் பதிவு வேகமாக நடப்பதில்லை என்று புகார்கள் எழுந்திருக்கின்றன. எனவே இந்த பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது இந்த பகுதியில் புதியதாக சொத்துக்களை வாங்கும் நபர்களுக்கு விரைவில் பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும். எவ்வித தாமதமும் கூடாது என்று கூறியுள்ளார்.
பத்திர பதிவில் தாமதம் இருப்பதால், இந்த பகுதிகளில் சொத்துக்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே இந்த பிரச்னையை தீர்க்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணையம் பத்திரப் பதிவை விரைவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications