அடுத்தடுத்து பாஜக வேட்பாளர்கள் எஸ்கேப்-ஆபாச வீடியோ- உபேந்திர சிங் ராவத் போட்டியில் இருந்து விலகல்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி லோக்சபா தொகுதியில் பாஜகவால் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிட்டிங் எம்பி உபேந்திர சிங் ராவத், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய நிலையில் லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார் உபேந்திர சிங் ராவத்.

பாரபங்கி லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியாக இருப்பவர் உபேந்திர சிங் ராவத். பாஜக அறிவித்த முதல் கட்ட 195 வேட்பாளர்களில் உபேந்திர சிங் ராவத் இடம் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி லோக்சபா தொகுதியில் மீண்டும் உபேந்திர சிங் ராவத் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றில் படுக்கையறையில் பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் அலங்கோலமாக காட்சி தருகிறார். அந்த ஆண், உபேந்திர சிங் ராவத் என்கிற பதிவுகளுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்தது. இதற்கு எதிராகவே உபேந்திர சிங் ராவத் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதில், உபேந்திர சிங் ராவத் ஆபாச வீடியோவில் இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பொய்யானதும் போலியானதுமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பாராபங்கி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் உபேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டதை விரும்பாத சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். உபேந்திர சிங் ராவத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ பரப்பிவிடப்படுகிறது; ஆகையால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமது சமூக வலைதளப் பக்கத்தில், ஏஐ தொழில் நுட்பம் மூலம் தமது உருவத்தை ஆபாச வீடியோவில் இணைத்து அவதூறு செய்துவிட்டனர். தமக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். இதனால் பாரபங்கி லோக்சபா தொகுதியில் தாம் போட்டியிடவில்லை. தேர்தல் அரசியலில் இனி போட்டியிடப் போவதும் இல்லை என அறிவித்துள்ளார் உபேந்திர சிங் ராவத்.
ஏற்கனவே, பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், வங்கப் பெண்களை இழிவாக பேசியதால் சர்ச்சையில் சிக்கியவர். இதனாலேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனையடுத்து மேற்கு வங்கம் அன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக தாம் போட்டியிடவில்லை என அறிவித்தார் பவன் சிங். பவன் சிங்கை தொடர்ந்து தற்போது உ.பி. பாராபங்கி வேட்பாளர் உபேந்திர சிங் ராவத், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் அறிவிக்கப்பட்ட 195 வேட்பாளர்களில் இதுவரை 2 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications