அன்றே எச்சரித்தோம்.. உ.பி.யில் பாஜகவை செம்ம 'சம்பவம்' செஞ்சது யாரு? அகிலேஷ்-ராகுல்? ஆர்.எஸ்.எஸ்.?
லக்னோ: 18-வது லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆண்ட பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவை உக்கிரமாக எதிர்த்த "இந்தியா" கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜக மலை போல நம்பிய உத்தரப்பிரதேசத்தில்தான் அக்கட்சி வாங்கிய மரண அடிதான் இந்த பரிதாபத்துக்கு காரணம் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில்தான் வென்றுள்ளது. பாஜகவால் தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க 16 இடங்களில் வென்ற தெலுங்கு தேசம் மற்றும் 12 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு அவசியமாகிறது.

உ.பி.யும் பாஜகவும்: லோக்சபா தேர்தலில் பாஜகவின் இந்த படுதோல்விக்கும் பரிதாப நிலைமைக்கும் காரணம் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம்தான். உ.பி.யில் 2014-ல் 71 இடங்களையும் 2019-ல் 62 இடங்களையும் கைப்பற்றியிருந்தது பாஜக. இம்முறை 80-க்கு 80 இடங்களையும் கைப்பற்றியே தீருவோம் என கர்ஜித்தனர் அக்கட்சித் தலைவர்கள். ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாக அமைந்துவிட்டன.
முடிவுகள்தான் என்ன?: உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும் பாஜக 33 இடங்களையும் கைப்பற்றியது. உ.பி.யில் காங்கிரஸை புதைகுழிக்கு அனுப்பிவிட்டோம் என கொக்கரித்தது பாஜக. ஆனால் இந்த முறை 6 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தில் சரிபாதிக்கும் அதிகமான இடங்களை பாஜக பெற முடியாமல்- தக்க வைக்க முடியாமல் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது.
என்ன நடந்தது?: சரி.. உத்தரப்பிரதேசத்தில் பாஜக இப்படி மரண அடி வாங்க என்ன காரணம்? அதுவும் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தொடக்கத்தில் பின்னடைவை எதிர்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது ஏன்? லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே நாம் சொல்லி இருந்த 2 முக்கிய காரணிகளில் ஒன்று அகிலேஷ்-ராகுல் இணையரின் சமூக நீதி வியூகம் மற்றொன்று உ.பி. தேர்தல் களத்தில் "ஒதுங்கி"க் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
அதாவது 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 40%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது பாஜக. அத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் 36 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸின் வாக்கு வங்கி காணாமலேயே போனது. இதற்கு காரணமே அகிலேஷ் கையிலெடுத்த சமூக நீதி வியூகம்தான்.
அகிலேஷின் சமூக நீதி வியூகம்: யாதவர்களுக்கான கட்சியாக சமாஜ்வாதி கட்சியை நடத்தாமல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அனைவருக்குமான பரந்துபட்ட கட்சியாக சமாஜ்வாதியை கட்டமைத்துவிட்டார் அகிலேஷ் யாதவ். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்விலேயே இந்த அதிரடியைத்தான் காட்டி இருந்தார் அகிலேஷ். பொதுத் தொகுதிகளிலும் தலித்துகளை நிறுத்தினார்.. யாதவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட, இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஜாதியினருக்கும் வேட்பாளர் தேர்வில் வாய்ப்பு கொடுத்தார். தலித்துகளிலும் புறக்கணிக்கப்பட்ட ஜாதியினரைத் தேடித் தேடி வாய்ப்பு தந்தார் அகிலேஷ் யாதவ். அனைவருக்குமான சமூகநீதியையே தேர்தல் வியூகமாக அகிலேஷ் யாதவ் செயல்படுத்தினார். இது மிக மிக அற்புதமாக சட்டசபைத் தேர்தலைப் போலவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு லோக்சபா தேர்தலிலும் கை கொடுத்திருக்கிறது.
இணைந்து ஆடிய ராகுல் காந்தி: அகிலேஷ் யாதவுடன் இணைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடைவிடாமல் முன்வைத்த முழக்கம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. அப்படி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இதர பிற்படுத்தபட்ட மக்களுக்கு கூடுதலாக இடஒதுக்கீடு கிடைக்கும்; இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கிற ராகுலின் வாக்குறுதியும் கை கொடுத்துள்ளது.
கைவிட்ட ஆர்.எஸ்.எஸ்: அகிலேஷ்-ராகுல் இணையரின் ஆட்டம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எப்போதும் பக்க பலமாக என்பதை விட அடித்தளமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனும் தாய் இயக்கத்தினரினரின் அர்ப்பணிப்புமிக்க தேர்தல் பணி இம்முறை உ.பி.யில் காணாமலேயே போய்விட்டது. இதனையும் நாம் முன்னரே சுட்டிக்காட்டி இருந்தோம். "7 ஆண்டுகள் உ.பி.யில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் சித்தாந்த அடிப்படையில் களப் பணியாற்றுகிற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? குறிப்பாக உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைவிடப்பட்டுதான் நிற்கின்றனர். எங்களால் எங்கள் பாஜக அரசுக்கு எதிராக போராடவும் முடியாது. இந்த தேர்தலுக்காக ஒரு சிறப்பு ஷாகாவை கூட நடத்தவே இல்லை என்றால் நாங்கள் எப்படி களப் பணியில் இறங்குவது? என குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர் என நாம் எழுதி இருந்தோம். தற்போது இந்த குமுறலின் 'அறுவடை' அம்பலமாகி இருக்கிறது. அமேதியில் ஓவராக பேசிய ஸ்மிருதி இரானி படுதோல்வி அடைந்துவிட்டார். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் வென்ற மோடி எப்படி போராடி ஜெயிக்க வேண்டிய நிலைமை இருந்தது என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கறிவர்.
அக்னி வீரர்கள் திட்டம்: இவை மட்டுமல்லாமல் விவசாயிகள் பிரச்சனை, பாஜக அரசின் அக்னி வீரர்கள் திட்டம் ஆகியவையும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அக்னி வீரர்கள் திட்டம் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனமும் குற்றச்சாட்டுகளும் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பது மிகையல்ல. அதேபோல உ.பி.யில் அரசு பணி தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரமும் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை காத்திருக்க வைத்து தேர்தலில் மொத்தமாக கொட்ட வைத்திருக்கிறது. இவற்றுக்கு அப்பால் பாஜகவின் உட்கட்டமைப்புகளில் ஏற்பட்ட ஆட்டம், பாஜக வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவையும் அக்கட்சியின் பெரும் வீழ்ச்சிக்கு காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications