ஜிம்மில் பெண்களுக்கு ஆண் கோச் கிடையாது.. ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது! உ.பி. மகளிர் ஆணையம் கருத்து
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கான ஆடைகளை ஆண்கள் தைக்கவும், பெண்களுக்கான சிகை அலங்காரத்தை ஆண்கள் மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும். அதேபோல் ஜிம்மில் பெண்களுக்கு ஆண்கள் கோச்சாக இருக்க கூடாது என்று அம்மாநில மகளிர் ஆணையம் முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக சட்டம் இயற்ற விரைவில் மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய தலைவியாக பபிதா சவுகான் என்பவர் உள்ளார். கடந்த மாதம் 28 ம் தேதி மாநில மனித ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி மாநிலத்தில் பெண்களுக்கான உடைகளை ஆண்கள் தைக்க தடை விதிக்க வேண்டும். பெண்களிடம் ஆண்கள் ஆடைகள் தைப்பது தொடர்பான அளவீடுகளை எடுக்க கூடாது. பெண்களுக்கான சிகை அலங்காரத்தை ஆண்கள் மேற்கொள்ள கூடாது. ஜிம்மில் பெண்களுக்கு, ஆண் கோச்சிகள் பயிற்சி வழங்க கூடாது. இதுபோன்ற சம்பவங்களில் ஆண்கள் தவறான நோக்கங்களுடன் பெண்களை தொடலாம்.
இதை தடுக்க இந்த பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். அதேபோல் மேற்கூறிய இடங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையம் விரைவில் மாநில அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளது. மேலும் இந்த பரிந்துரைகளை பின்பற்றும் வகையில் சட்டம் இயற்றவும் மாநில அரசிடம் வலியுறுத்த உள்ளது.
இதுபற்றி உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஹிமானி அகர்வால் கூறுகையில், ‛‛அக்டோபர் 28 ம் தேதி மகளிர் ஆணைய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெண்களின் ஆடைகளின் அளவீடுகளை பெண் தையல்காரர்கள் மேற்கொள்ள வேண்டும். சலூன் கடைகளில் பெண்களின் முடிகளை பெண்கள் மட்டுமே திருத்தம் செய்ய வேண்டும். தையல் கடை, சலூன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஆண்களையும் நாங்கள் குறை சொல்லவில்லை. சில ஆண்கள் கெட்ட எண்ணத்தோடு பெண்களை அணுகுகிறார்கள். இதனால் பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனை தடுக்க இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.












Click it and Unblock the Notifications