பிரஷர் தாங்க முடியலை.. இதுவெல்லாம் ஒரு வேலையா? SBI உதவி மேனேஜர் திடீர் ராஜினாமா!
லக்னோ: ஒவ்வொருவருக்கும், வங்கி பணி பெரும் கனவாக உள்ளது. இந்நிலையில் தான் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா'- வில் மனச்சோர்வு மற்றும் தொடர் பணி அழுத்தம் உள்ளிட்டவற்றால் உதவி மேனேஜராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் அந்த வேலை வேண்டாம் என்று கூறி வெளியேறியதோடு, யோகா மையத்தை தொடங்கி உள்ளார்.

பொதுவாக சமூக வலைதளங்களில் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்ந்த வேடிக்கையான மீம்களை நெட்டிசன்கள் அதிகம் பகிர்வது உண்டு. குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி பல மீம்கள் இணையதளங்களில் குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் தான் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் கூட பணி அழுத்தம் உள்ளதை காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நம்மில் பலருக்கும் அரசு வேலை என்பது பெரும் கனவாக உள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது.
ஆனால் இங்கே பெண் ஒருவர் மனஅழுத்தம் காரணமாக 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா'-வில் உதவி மேனேஜராக பணியாற்றி வந்த நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்து 'யோகா மையம்' தொடங்கி உள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஸ்னிக்தா போஸ். இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தான் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா'-வில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் சமீபகாலமாக மனச்சோர்வு மற்றும் தொடர் பணி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பணியை மாற்ற முடிவெடுத்து யோசித்து வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் எஸ்பிஐ வங்கியின் உதவி மேனேஜர் பணியை ராஜினாமா செய்துள்ளதோடு, ஸ்னிக்தா போஸ் புதிதாக யோகா மையத்தை தொடங்கி உள்ளார். 'துலா வெல்நஸ் ஸ்டியோ' என்ற பெயரில் யோகா மற்றும் நல்வாழ்வு மையத்தை மீரட்டில் தொடங்கி உள்ளார்.
இதுபற்றி ஸ்னிக்தா போஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ''ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் எனக்கு நிலையான மற்றும் நல்ல வேலை இருந்தது. இந்த பணியால் எதிர்காலத்துக்கு எந்த பயமும் இருக்காது. ஏனென்றால் வங்கியில் உதவி மேலாளராக இருந்ததால் டீசண்ட்டான சம்பளம் கிடைத்தது. இதனால் இந்த பணியை விட்டு ஒருபோதும் செல்லக்கூடாது என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள். ஆனால் நான் என்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டேன்.
இப்போது யோகா மையத்தை சொந்தமாக தொடங்கி உள்ளேன். பணியை ராஜினாமா செய்து யோகா மையம் தொடங்கியதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. என்னுடைய பணியால் நான் மனஅழுத்தத்தை உணர்ந்தேன். தினமும் தலைவலி ஏற்பட்டது. வலி நிவாரணியை தினமும் பயன்படுத்த வேண்டியிருந்தது. இப்படியான வாழ்க்கையை நான் விரும்பவில்லை. இதனால் எப்படியாவது என்னுடைய வாழ்க்கையை முறையை மாற்ற வேண்டும் எனறு விரும்பி பணியை ராஜினாமா செய்தேன்'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
