"ஹிஜாப் அத்தியாவசியம் இல்லை.." முஸ்லிம் மாணவியின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர், பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறை என்பதை நிரூபிக்க முடியாது என்று சொல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பள்ளிகளில் யூனிபார்ம் விதிகள் கட்டாயம் அமலில் இருக்கிறது. அனைத்து பள்ளி மாணவர்களுமே ஒரே யூனிபார்ம் அணிந்தே பள்ளிக்கு வர வேண்டும். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பை அணிவார்கள். பல ஆண்டுகளாகவே இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால், கடந்த சில காலமாக திடீரென ஹிஜாப் அணிய பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகிறது.

ஹிஜாப் வழக்கு
அதன்படி உத்தர பிரதேசத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 11ம் வகுப்பு படிக்கும் முஸ்லீம் மாணவி ஒருவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜீத் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அந்த மாணவி, தான் சிறுவயது முதலே ஹிஜாப் அணிந்து வருவதாகவும், பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஹிஜாப் அணிந்தபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே, தொடர்ந்து பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
தள்ளுபடி
இருப்பினும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஏனென்றால் அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்தை கோருவதற்கு, ஒரு மத நடைமுறை அத்தியாவசியமானது என்பதை உரிய சட்ட மற்றும் உண்மை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது. ஹிஜாப் அணியாமல் இருந்தால் இஸ்லாமிய நம்பிக்கையே பாதிக்கப்படும் அளவுக்கு அது கட்டாயமான மத நடைமுறை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் மனுவில் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பள்ளிகளில் ஒரே மாதிரியான, பாரபட்சமற்ற சீருடை விதிகள் இருப்பதாகவும் இது ஒழுக்கம் மற்றும் கல்வி நிறுவனத்தின் அடையாளத்தை பராமரிப்பதற்காக கொண்டு வரப்படுவது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதுபோன்ற சூழலில், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் சீருடையில் மாற்றம் கோர முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், மாணவி மற்ற வகுப்புகளில் ஹிஜாப் அணிந்தபோது பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதாலேயே இனிமேலும் அதை அணிய சட்டப்பூர்வ அணியலாம் என்று அர்த்தமில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நீதிமன்றம் கருத்து
நீதிபதிகள் மேலும், "முன்பு பள்ளி நிர்வாகம் சீருடை விதியை அமல்படுத்தாமல் இருந்திருக்கலாம் அல்லது தயக்கம் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பின்னர் சீருடை விதியை அமல்படுத்த பள்ளிக்கு உரிமை உள்ளது" என்றனர். மேலும், பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று பல்வேறு உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே கூறியுள்ளதை அமர்வு சுட்டிக்காட்டியது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஹிஜாப் அணிய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், அந்த தீர்ப்பை மாற்ற எந்த காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் இதுவரை எந்தவொரு கருத்தும் கூறாத நிலையில், அந்த தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதையடுத்து மாணவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பள்ளி தனது சீருடை விதிகளை அமல்படுத்தலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
