'எண்ணும் எழுத்தும்'.. தொடக்க கல்வியை கையில் எடுத்த உ.பி யோகி.. 2027ம் ஆண்டுக்கான டார்கெட் இதுதான்
உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கல்வி கட்டமைப்பை மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேச கல்வித்துறையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து 6 வருடங்கள் ஆகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் இருந்தவர் என்கிற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் இவரை விட சில முதலமைச்சர்கள் நீண்ட நாட்கள் பதவி வகித்து வந்தாலும் இவரை போல தொடர்ச்சியாக பதவியில் இருந்ததில்லை. எனவே இந்த சாதனையை மாநில அரசு கொண்டாட தயாராகி வருகிறது. மறுபுறம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களையும் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏனெனில் வழக்கமாக இந்த மாநாடு மும்பை அல்லது டெல்லியில்தான் நடக்கும். ஆனால் லக்னோவில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதானால்தான் முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை தற்போதைய ஆட்சியில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல மறுபுறம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மட்டுமல்லாது இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொடக்க கல்வி குறித்து புதிய அறிவிப்பை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு. 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதைதான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.

அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபு தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும். இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும். இதற்கான ஆசிரியர்கள் முழுவீச்சில் களத்தில் இறக்கப்படுவார்கள். ஆசிரியர்களின் முயற்சியும், மாணவர்களின் ஒத்துழைப்பும் சேரும் போது இந்த திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications