மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம்.. யோகி ஆதித்யநாத் எடுத்த மாஸ் நடவடிக்கை!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அந்நிய முதலீட்டை மேம்படுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க, வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறுகையில், "நமது மாநிலத்தின் வளர்ச்சிக்காக அந்நிய நேரடி முதலீடு அவசியமாகிறது. தற்போது குறைந்தபட்சமாக ரூ.9,435 கோடி அளவில் முதலீடு குவிந்திருக்கிறது. இதனை அதிகரிக்க அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த கொள்கைக்கு தற்போது முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் மூலம் நமது மாநிலத்தில் முதலீடு மேற்கொள்ளும் அந்நிய நிறுவனங்களுக்கு உத்தரப் பிரதேச தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புக் கொள்கையின் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக மின்சாரம் 100% இலவசமாக விநியோகிக்கப்படும்.
நமது இலக்கு ஒரு டிரல்லியன் டாலர் பொருளாதாரம்தான். இதனை சாத்தியப்படுத்த நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. புதிய இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக விரைவில் உத்தரப் பிரதேசம் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
