உபி தலித் சிறுமிகள் பலாத்காரம், நெரித்து கொலை! அதன் பிறகும்.. அதிர வைத்த பிரத பரிசோதனை முடிவுகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரு தலித் சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் பிரேதப் பரிசோதனை விவகாரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் உபி-இல் இரு தலித் சிறுமிகள் கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிகள்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள தமோலியாபுர்வா என்ற கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் உடல்கள், அங்குள்ள கரும்பு தோட்டத்தில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 17 மற்றும் 15 வயதே ஆன அந்த இரு சகோதரிகள் தங்கள் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

போராட்டம்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் சிலர் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாகச் சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

6 பேர் கைது
இந்த இரட்டைக் கொலை விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சுஹைல், ஜுனைத், ஹபிசுல் ரஹ்மான், கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறுமிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய சோட்டு என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

பிரேதப் பரிசோதனை
இரு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. சிறுமிகளை நேற்று கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, சுஹைல் மற்றும் ஜுனைத் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சஞ்சீவ் சுமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்ன நடந்தது
அதேநேரம் தாயாரின் கருத்துக்கு மாறாக, குற்றவாளிகள் சுஹைல் மற்றும் ஜுனைத் உடன் விருப்பத்துடனேயே சிறுமிகள் சென்றதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் போலீசார் குறிப்பிட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "கரும்பு தோட்டத்தில் வைத்து சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து தங்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமிகள் கேட்டுள்ளனர்.

இரு ஆண்கள்
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுஹைல் மற்றும் ஜுனைத் அவர்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். அதன் பின்னர் எப்படியாவது இதை தற்கொலை போல மாற்ற வேண்டும் என திட்டமிட்ட அவர்கள், உதவி கேட்டு கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோருக்கு கால் செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து இதைத் தற்கொலை போல மாற்றி உள்ளனர்" என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2014இல் நடந்த அதே சம்பவம்
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அம்மாநில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு பதாவுன் என்ற பகுதியில் இதேபோல இரு சகோதரிகள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications