அவ்வளவு ஈஸி கிடையாதாம்.. பாஜகவின் கோட்டை அயோத்தியில் இன்று தேர்தல்.. "தாமரைக்கு" பெரும் சவால்!
லக்னோ: அயோத்தி ஜென்மபூமி தீர்ப்பிற்கு பின் முதல்முறை அயோத்தி தொகுதியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குபதிவு நடக்க உள்ளது. அங்க இன்று நடக்கும் வாக்கு பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
இன்று உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 5-வது கட்டமாக 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.
இதனையடுத்து 12 மாவட்டங்களில் உள்ள மேலும் 61 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பாரபாகி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.

அயோத்தி
அயோத்தி, அலஹாபாத், அமேதி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்க உள்ளது. அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு, கோவில் கட்டுமானங்கள் நடந்து வரும் நிலையில்தான் இங்கு முதல்முறையாக தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இந்த முறை அயோத்தி பாஜகவிற்கு அவ்வளவு எளிதான தொகுதியாக இருக்க போவது இல்லை.

கோவில்
ராமர் கோவில் விவகாரம் அயோத்தி மட்டுமின்றி மொத்தமாக உத்தர பிரதேச தேர்தல் களத்தையே தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் பாஜக இதை கண்டிப்பாக பிரச்சாரங்களில் எடுப்பது வழக்கம். இந்த முறை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை சுட்டிக்காட்டி பாஜக வாக்கு கேட்டது. 1991ல் இருந்தே அயோத்தி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.

அயோத்தி பாஜக
ஆனால் இடையில் 2012ல் மட்டும் இங்கு சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. தற்போது பாஜக சார்பாக வேத் பிரகாஷ் குப்தா இங்கு எம்எல்ஏவாக இருக்கிறார். பிராமண சமூகத்தை சேர்ந்த இவர் மீண்டும் பாஜக சார்பாக இங்கு களமிறக்கப்பட்டு உள்ளார். 2012ல் பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளர் பவான் பாண்டே இங்கு வெற்றிபெறார். இவரை சமாஜ்வாதி இன்று மீண்டும் களமிறக்கி உள்ளது.

கடினம்
இந்த முறை சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்கள் மற்றும் யாதவ் பிரிவினர், விவசாயிகள் வாக்குகளை நம்பி களமிறங்கி உள்ளது. அயோத்தி தொகுதியில் யாதவர்கள் 37 ஆயிரம் பேர், இஸ்லாமியர்கள் 55 ஆயிரம் பேர் என்று மொத்தம் 92 ஆயிரம் வாக்காளர்கள் சமாஜ்வாதிக்கு ஆதரவாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் விவசாயிகள், தலித்கள், இடைநிலை சாதியினர் வாக்கு சமாஜ்வாதி பக்கம் சாய வாய்ப்பு உள்ளதால் இந்த தொகுதி பாஜகவிற்கு அவ்வளவு எளிதான வெற்றியை கொடுத்துவிட்டது.

பாஜக வேட்பாளர்
பாஜக இதை கணக்கில் வைத்தே பிராமண வேட்பாளரை களமிறக்கி உள்ளது. இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் திட்டத்தில் பாஜக உள்ளது. முதலில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆதித்யநாத் அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிட மாட்டார்.. அவர் கோரக்பூரில்தான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பாஜக தோல்வி
இங்கு பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ளதே இதற்கு காரணம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கி இருந்தாலும் கூட பல்வேறு காரணங்களுக்காக இந்த தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை ஆதித்யநாத் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் அயோத்தியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 40 பஞ்சாயத்து இடங்களில் வெறும் 8ல் மட்டுமே பாஜக வென்றது. அந்த மாவட்டத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது.

படுதோல்வி
பஞ்சாயத்து தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சார்பாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட 22 பேர் வெற்றிபெற்றனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட 4 பேர் வெற்றிபெற்றனர். மொத்தமாக மாநிலம் முழுக்க உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று இருந்தாலும் கூட அயோத்தியில் அதிக இடங்களில் தோல்வி அடைந்தது. இது அக்கட்சிக்கு பெரிய ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில்தான் தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications