ஐஏஎஸ் பதவியே வேண்டாம்.. திவ்யா மிட்டல் திடீர் ராஜினாமா.. பாஜகவினரின் பிரஷரால் குட்பை?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் உருக்கமாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பின்னணியில் பாஜகவினர் கொடுத்த பிரஷர் தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

uttar-pradesh-ias-officer-divya-mittal-resigns

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். உத்தர பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் திவ்யா மிட்டல் (வயது 43). இவர் கடந்த 2013ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வருவாய் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் திடீரென்று திவ்யா மிட்டல் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேர்மையான அதிகாரியாக பெயர் பெற்ற இவர் தற்போது ராஜினாமா செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக கூறியுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது:

''இன்று நான் எனது ஐஏஎஸ் பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்து உள்ளேன். கடந்த 13 ஆண்டுகளாக இந்த பயணம் எனக்கு மறக்க முடியாத பல நினைவுகளை தந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ராஜினாமா செய்கிறேன். எளிய சூழலில் வளர்ந்த நான் நல்ல, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு கண்டேன். ஐஐடி டெல்லி மற்றும் ஐஐஎம் பெங்களூரில் படித்து முடித்து இரவு, பகலும் உழைத்து லண்டனில் பணிக்கு சேர்ந்தேன். ஆனால் எல்லாம் இருந்தும், ஏதோ ஒன்று இன்றி வாழ்க்கை முழுமையடையாதது போல் உணர்ந்தேன். அதோடு என் சொந்த நாட்டில் இல்லாதது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதனால் எனக்கு கல்வி, தன்னம்பிக்கையை தந்த இந்த நாட்டுக்கு நான் பட்ட கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தேன். இதனால் முயன்று ஐஏஎஸ் ஆனேன். ஐஏஎஸ் அதிகாரியாக பல விஷயங்களை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைததது. நான் நிறைய கற்றுக்கொண்டேன். சரியானவற்றுக்காக நிற்பது ஒரு விருப்பமாக இருக்க கூடாது. அது கடமையாக இருக்க வேண்டும் என்பதை தியோரியா (மாவட்டம்) எனக்கு கற்றுக்கொடுத்தது. அதேபோல் முடியாதது என்பது உண்மையல்ல. அது வெறும் கருத்து தான் என்பதை மிர்சாபூர்(மாவட்டம்) எனக்கு கற்றுக்கொடுத்தது. மேலும் அதிகாரம் என்பது பதவியில் இருந்து வருவதில்லை மாறாக மக்களின் நம்பிக்கையில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்தேன்.

நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால் எனக்காக நான் கண்ட நினைவுகள் நிறைவேறிவிட்டன. இப்போது என் மக்களுக்காக நான் கண்ட கனவுகளுடன் வாழ வேண்டி உள்ளது. முதன் முறையாக நில உரிமை பெற்ற குடும்பத்தின் கண்களிலும், கண்ணியத்துடன் வாழ வாய்ப்பு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் கண்களிலும், வயல்களுக்கு நீர் கிடைத்த விவசாயிகளின் கண்களிலும் இந்த வாழ்வின் உண்மையான அமைதி தெரிந்தது. அவர்களின் போராட்டகளில் அவர்களுடன் பயணித்தபோது ஒவ்வொரு அரசு கோப்பின் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

நான் ஏதோவொன்றை கொடுக்க வந்திருக்கிறேன் என்று நினைத்தது முட்டாள்தனம். உண்மை என்னவென்றால், நான் தான் எல்லாவற்றையும் அதிகமாக பெற்றேன். இதனால் என்னுடைய நன்றி கடன் அதிகமாக வளர்ந்தது. என்னை விட மக்கள் தான் அதிகமாக மகிழ்ந்தனர். நான் சோர்வாகவோ அல்லது மனமுடைந்தோ இருந்தபோதும், அவர்கள் அதே நம்பிக்கையுடன் என்னைப் பார்த்தார்கள். இதுவே, தொடர்ந்து முன்னேறி செல்வதற்கான தைரியத்தை எனக்கு அளித்தது.

நான் மிகுந்த அன்பையும், மிகுந்த மரியாதையையும், மிகுந்த பாசத்தையும் பெற்றேன். என்னுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றிய சக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். இன்று, என் கண்கள் நன்றியால் கலங்குகின்றன. ஒரே ஒரு காட்சி என் இதயத்தில் பதிந்துள்ளது: லஹுரியா தா மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி முதன் முறையாக தன் கிராமத்திற்கு குடிநீர் வருவதை கண்டு, எதுவும் பேசாமல், நடுங்கும் கைகளால் என் தலையை தொட்டு ஆசி வழங்கினார். இன்று நான் என் பதவியை இழந்திருக்கலாம், ஆனால் அந்தத் ஆசீர்வாதம் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும். இந்த நாட்டின் கனவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் ராஜினாமா செய்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை ஆனால் அதன் பின்னணியில் சில விஷயங்கள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது திவ்யா மிட்டல் உத்தர பிரதேச அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திவ்யா மிட்டல் தற்போது வருவாய் துறையின் சிறப்பு செயலாளராக உள்ளார். ஆனால் திவ்யா மிட்டல் மக்களுக்கு நேரடியாக சேவையாற்றும் வகையிலான களப்பணி சார்ந்த துறையில் பதவியை கேட்டுள்ளார். அதனை உத்தர பிரதேச அரசு வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாஜகவினருக்கும், திவ்யா மிட்டலுக்கும் இடையே பகை உள்ளதாகவும் கூறப்படுகிறது. திவ்யா மிட்டல் மிர்சாபூர் பாஸ்தி மற்றும் தியோரியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார். இந்த சமயத்தில் அவரது ஒவ்வொரு நடவடிக்கைளும் பேசப்பட்டன. மிர்சாபூர் மாவட்ட கலெக்டராக இருநதபோது அவர் சுதந்திரமடைந்து குடிநீர் வசதி கிடைக்காத லஹுரியா தா மலை கிராமத்துக்கு குழாய் வழியாக குடிநீர் வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இது நடந்தது. இதில் பாஜகவினரை அழைக்கவில்லை என்று சர்ச்சையில் சிக்கினார். இதுதொடர்பாக பாஜக தலைவர் விபூல் சிங் அதிருப்தியானார்.

திவ்யா மிட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்துககு கடிதம் எழுதப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 1ம் தேதி திவ்யா மிட்டல் தூக்கியடிககப்பட்டார். 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு தியோரியா மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தியோரியா மாவட்ட கலெ க்டராக இருந்த அவர் லக்னோவிற்கு மாற்றம் செய்யபபட்டார். இந்த வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் என்பது ஓரம்கட்டப்படும் துறையாக பார்க்கப்படும் நிலையில் அவர் அதற்கு நியமனம் செய்ப்பட்டார். இதனை விரும்பாமல் தான் திவ்யா மிட்டல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதனை திவ்யா மிட்டல் உறுதி செய்யவில்லை.

இது ஒருபுறம் இருக்க உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திவ்யா மிட்டல் காங்கிரஸ் கட்சியில் இணையலாம், இதற்கு முன்னோட்டமாக அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+