இதுதான் யோகியின் "ராஜ்ஜியம்".. பதறும் பெண்கள்.. ஒன்றா, இரண்டா.. வரிசை கட்டி நிற்கிறது வன்முறைகள்!
உபியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
லக்னோ: கரும்பு தோட்டத்துக்குள் உடம்பெல்லாம் காயங்களுடன் 13 வயது சிறுமியின் சடலத்தை பார்த்ததுமே ஒட்டுமொத்த உத்தரபிரதேசமும் மிரண்டு விட்டது.. "ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது" என்று சொல்லும் முதல்வர் யோகியின் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற வலுவான கேள்வி ஆழமாக எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. அதெல்லாம் ஒரு ஊரா? என்று கேட்க தோன்றுகிறது.. கொஞ்ச நாளாகவே அங்கு வன்முறைகள் பேயாட்டம் ஆடி கொண்டிருக்கிறது.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அளவுக்கு அதிகமாக நடந்து வருகிறது.
ஒன்றா, இரண்டா.. வரிசை கட்டி நிற்கிறது வன்முறைகள்..
லஷ்மிப்பூர் கேரி என்ற பகுதி.. வெறும் 13 வயசு குழந்தையை ஒரு வெறிபிடித்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.. அந்த குழந்தையின் உடல் ஆகஸ்ட் 16-ம் தேதி அந்த பகுதியில் இருந்த ஒரு கரும்பு தோட்டத்துக்குள் கண்டெடுக்கப்பட்டது.

ஈவ்-டீஸிங்
அதேபோல, சுதிஷா என்ற அமெரிக்காவில் காலேஜ் படித்து வந்த மாணவி.. லாக்டவுன் என்பதால் ஊருக்கு வந்திருந்தார்.. புலந்தசகர் மாவட்டம் அவுரங்காபாத் அருகே தன் அண்ணனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. பிறகு திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவர் எப்படி இறந்தார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் பைக்கில் பின்னாடியே வந்த இளைஞர்கள் சுதிஷாவுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளனர்.. பின்னாடியே துரத்தி துரத்தி வந்ததால், பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தே விட்டார்.

குழந்தை
இன்னொரு சம்பம் ஆகஸ்ட் 6-ம்தேதி நடந்துள்ளது.. ஹாப்பூர் என்ற பகுதியில் 6 வயது பெண் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர்.. விளையாடி கொண்டிருந்தவளை கடத்தி, யாருமில்லாத பகுதியி லவைத்து பலாத்காரமும் செய்து, ஒரு புதருக்குள் தூக்கி வீசி சென்றுள்ளனர் காமுகர்கள்.. அந்த குழந்தையின் உடம்பெல்லாம் ரத்தம்..மோசமான காயங்கள்.. மீரட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்.

குரல்வளை
இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள், அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி, புலந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில் 8 வயசு சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்4 நடந்துள்ளது.. ஆனால் அந்த குழந்தை கத்தி கூச்சலிடவும், அவள் குரல்வளையை நெரித்தே கொன்றுவிட்டனர்.. அந்த சிறுமியின் உடலும் கரும்பு தோட்டம் ஒன்றில்கண்டெடுக்கப்பட்டது.

ராமர் கோயில்
இப்படி ஒரு கொலை நடந்த அன்று, அதே ஆகஸ்ட் 5-ம் தேதி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.. ஒட்டுமொத்த மீடியாவும், ராமர் கோயில் பூமி பூஜை குறித்த செய்தியில் ஆர்வம் காட்டி கொண்டிருந்த அதேசமயம், காணாமல் போன இந்த குழந்தையை பெற்றோர் கதறி கொண்டு தேடி கொண்டிருந்த அவலம் நடந்தது.

குற்றங்கள் குறைவு
இதேநாள் யோகி ஒரு பேட்டி தந்தார்.. அதில், "நம்ம மாநிலத்தில் குற்றங்கள் குறைவாகத்தான் நடக்கிறது.. அதுவும் இந்த 3 வருஷத்தில் உத்தரபிரதேசத்தில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.. சட்டம்-ஒழுங்குகூட நல்லாவே இருக்கு.. இனி வரப்போகும் நாட்களிலும் இது நல்ல நிலைக்கு இட்டு செல்லும்" என்று புளகாங்கிதத்துடன் சொன்னார்.

ராம ராஜ்ஜியம்
"இந்த நாட்டில் ராமராஜ்ஜியம்தான் இருக்கவேண்டும்.. சோசியலிசம் இருக்கக்கூடாது.. ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது" என்று யோகி சொன்னாலும், பெண்களின் பாதுகாப்பு நல்லாதான் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புள்ளிவிவரங்களை பார்த்தாலே இது நன்றாக புலப்படவும் செய்கிறது.

வன்முறை சம்பவங்கள்
2018-ல் ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ததாக 3,78,777 கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.. இதில், உபியில் மட்டும், 59 ஆயிரத்து 445 கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.. அதாவது தேசம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த வழக்குகளில் 15.8 சதவீத குற்றங்கள் இந்த மாநிலத்தில்தான் நடந்திருக்கிறது.. 4,322 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.. புகார் தரப்பட்டு பதிவான வழக்குகள்தான் இவையெல்லாம்.. கேஸ் போடாமல் போன குற்றங்கள் கணக்கிலடங்காதது.

பாலியல் தொல்லைகள்
கடந்த 2017ல் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஆன்ட்டி-ரோமியோ ஸ்குவாட் அமைக்கப்படும் என்று சொன்னார்.. பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை எதுவும் நடக்காமல் இருக்க இந்த குழு உறுதி செய்யும் என்றார்.. அது இப்போது எந்த நிலைமையில் உள்ளது என்று தெரியவில்லை.

பாதுகாப்பு
ஆன்ட்டி-ரோமியோ குழுவினரை மறுபடியும் மறுசீரமைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டும், தற்போது அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதும் கவனிக்க வேண்டி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ராமராஜ்ஜியம் கொண்டு வருகிறார்களோ இல்லையோ பெண்களுக்கான பாதுகாப்பை முதலில் கொண்டு வரவேண்டியது அவசர கடமையாக யோகிக்கு உள்ளது!












Click it and Unblock the Notifications