உ.பி.: பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடிவாரண்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு 7 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவே ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன. அதேநேரத்தில் 2017 தேர்தலைப் போல 312 இடங்களை பாஜக பெறாது; குறைந்தது 100 தொகுதிகளை பாஜக இழக்கும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அத்துடன் சமாஜ்வாதி கட்சி, களத்தில் பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரும் என்றும் அவை சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இந்நிலையில் உ.பி. தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக ஆளும் பாஜக அமைச்சர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 6 எம்.எல்.ஏக்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேவேகத்தில் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து சமாஜ்வாதி கட்சிகளிலும் இணைத்து கொண்டுள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து ஸ்வாமி பிரசாத் மவுரியாதான் முதன் முதலாக விலகினார். அதையடுத்தே அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர்.
இந்த பரபரப்புகளுக்குள் தற்போது 7 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றில் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014-ல் பொதுக்கூட்டடத்தில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஸ்வாமி பிரசாத் மவுரியா ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 24-ல் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications
