பாஜகவின் திட்டங்கள் மக்களுக்கானது.. ஓட்டு வங்கிக்கானது அல்ல! உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானது என்றும் வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக கொண்டது அல்ல எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இன்று உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த யோகி ஆதித்யநாத், "மாநில அரசு இதுவரை ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுக்கு முன்னர் இந்த மாநிலத்தில் வன்முறையும், கலவரங்களும் மக்களின் கொண்டாட்டங்களை தடுத்திருந்தது. ஏராளமான இளைஞர் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. சாலை வசதிகள் பலப்படுத்தப்பட்டன. இது நவீன உத்தரப் பிரதேசத்தின் கம்பீரத்தை பிரதிபலித்தது. அதன் பின்னர் நாங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். இந்த மாநாடு மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. ஆனால் எங்களுக்கு மேலும் ஒரு சவால் காத்திருந்தது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்த முதலீடுகள் மீண்டும் திரும்பிடும் அபாயம் ஏற்பட்டது. எனவே அடுத்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலத்தில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினோம்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் உள்கட்டமைப்பு மட்டுமல்லாது கல்வி, பெண்கள் முன்னேற்றம், இணைய வசதி என 10 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தொழில்துறைகள் உத்தரப் பிரதேசத்தில் வலுவாக இயங்கும். எங்கள் மாநில இளைஞர்கள் இனி வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் நாங்கள் கவனமாக கையாண்டுள்ளோம். ஒரு காலத்தில் கள்ள துப்பாக்கி தயாரிப்பில் பெயர் போன இந்த மாநிலம் தற்போது சிறந்த தொழில் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கலவரங்கள் இல்லை, வன்முறைகள் கிடையாது.. மக்கள் தங்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தன்மை வாய்ந்த சில பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' எனும் திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கான வருவாய் அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது. இதுதான் உண்மையான உத்தரப் பிரதேசம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications