அடிதூள்.. 1.75 கோடி உ.பி மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்! தீபாவளி பரிசு கொடுத்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி பண்டிகைக்கு இலவச சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உஜ்வாலா திட்டத்தின் மூலம் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகைக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆண்டு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள லோக் பவனில் இலவச சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தை இன்று யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், "தீபாவளி, ஹோலி என ஆண்டுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் உ.பி மக்களுக்கு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது, "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள தகுதியான 1.75 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக நிரப்புவதற்கான விநியோக பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைக்கிறேன்.
உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான எரிபொருளை எல்பிஜி வடிவில் வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் கண்கள் மற்றும் நுரையீரலை விறகு அடுப்பிலிருந்தும் பாஜக அரசு பாதுகாத்திருக்கிறது. இதற்காக மாநில அரசு ரூ.2,312 கோடியை செலவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2014க்கு முன் நிலைமை எப்படி இருந்தது என்று நினைத்து பாருங்கள். மக்களால் கேஸ் இணைப்பை பெற முடியவில்லை. இணைப்பு கிடைத்தாலும், சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.
அப்போது ஏழை, எளிய மக்கள் எரிவாயு இணைப்பு பெறுவது பற்றி யோசிக்கக்கூட முடியவில்லை. விறகு அடுப்பு காரணமாக ஏராளமான பெண்கள் தீவிரமான சுவாச நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் எல்லாம் பாஜக அரசு வந்த பிறகு மாறியது. இந்த மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications