நியோமேக்ஸ் ரூ.5,000 கோடி மோசடி.. 2 பேர் கைது.. பணம் திரும்ப கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கண்ணீர்
மதுரை: நியோ - மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் வாங்கி நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக முதலீட்டாளர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். பண மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தினசரியும் ஏதாவது ஒரு மோசடி நிறுவனம் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. தேக்கு மர வளர்ப்பு மோசடி, ஈமு கோழி மோசடி, பாசி நிதி நிறுவன மோசடி என கடந்த காலங்களில் எத்தனையோ மோசடிகளைப் பற்றி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோசடி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும் வங்கிகளில் கூடி பேசி கலைந்ததுதான் மிச்சம் பணம் திரும்ப கிடைத்தபாடுதான் இல்லை.

மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆயிரங்களிலும் லட்சங்களிலும் ஏமாந்த மக்கள் தற்போது கோடிகளில் ஏமாறத் தொடங்கி விட்டனர். சொந்த உறவினர்களே வீட்டிற்கு வந்து பேசி முதலீடு செய்யச் சொல்கிறார்களே என்று நம்பி பணத்தை கட்டி ஏமாந்தவர்கள்தான் அதிகம்.
பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, வெளிநாட்டு டூர் என ஜாலியாக அழைத்து சென்று விட்டு கடைசியில் பணத்தை பட்டை நாமம் போட்டு விடுகின்றனர். இப்போது புதிதாக ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்வதாக கூறி பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துள்ளது நியோ மேக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானோர் மத்திய தர குடும்பத்தினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை சொந்த நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள்தான். பணம் இருப்பதை தெரிந்த உறவினர்கள்தான் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று சொன்னதை நம்பி பணத்தை கட்டி விட்டு தற்போது ஏமாந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரிடம் ரூ.14,168 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஆருத்ரா, ஹிஜாவ், ஐஎப்எஸ் நிதி நிறுவனங்களின் வழக்குகளில் மட்டும் 1,500 ஏஜென்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேட்டியளித்த ஐ.ஜி ஆசியம்மாள் கூறினார். 21 நிதி நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர், அதிக வட்டி மற்றும் இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.14,168 கோடி முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனங்களின் இயக்குனர்கள், ஏஜென்ட்டுகளை கைது செய்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும், அவர்களின் சொத்துகளை முடக்கவும் இன்டர்போல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மதுரை அரசரடியைசேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் 55, பொன்மேனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 54, திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.வீரசக்தி 49 மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலக்கரை வி.தியாகராஜன் 51, நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி 50, கோவில்பட்டி கே.நாராயணசாமி 63,அருப்புக்கோட்டை எஸ்.மணிவண்ணன் 55, சிவகங்கை குமாரப்பட்டி அசோக் மேத்தா பஞ்சய், தேவகோட்டை ராம் நகர் எம்.சார்லஸ், தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள்,80 ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்துள்ளனர். பத்தாயிரம் புகார்தாரர்கள் உள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்நிலையில், மனுதாரர்கள் சூம் மீட்டிங் நடத்தி யாரும் புகார் அளிக்கக்கூடாது, புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது என மிரட்டியுள்ளனர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். யார் யார் பெயரில் சொத்துகள் உள்ளன? எங்கெங்கு சொத்துகள் உள்ளன? பினாமிகள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகிவிடுவர் என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 10 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் நெல்லை கிளையை சேர்ந்த இயக்குநர்கள் இரண்டு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சங்கரலிங்கபுரம், சூலக்கரை, தாயில்பட்டி ராமலிங்கபுரத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். மோசடி செய்திகள் வரிசையாக வெளியாகி வரும் நிலையில் தங்களுடைய பணம் திரும்ப கிடைக்குமா என்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர்.
எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு கொடுப்போம் என்று முதலீட்டாளர்களுக்கு நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் கூறியுள்ளனர். உச்சிப்புள்ளியில் ஒரே மாதிரி புதிதாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதை காண்பித்து தங்கள் நிறுவனம் சார்பில் நிலமாக வாங்கி வீடு கட்டி விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பதாகச் சொன்னார்கள்.
விருதுநகரில் ஒரு இடத்தை காட்டி, இது நியோமேக்ஸ் நிறுவனத்தின் இடம்தான் இந்த இடத்தை விற்று பணத்தை இரட்டிப்பாக வழங்குவோம் அல்லது வீட்டுமனை வழங்குவோம் என மூளைச்சலவை செய்து வாங்கியுள்ளனர்.
இதுவரை இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள ரூ.10 ஆயிரம் கோடியில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் நிறுவன பங்குதாரர்களின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டதாகவே கணக்கில் காட்டி மோசடி செய்திருக்கின்றனர் என்று முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். தங்களின் முதலீடு திரும்ப கிடைக்குமா? பல லட்சம் பணம் திரும்ப வருமா என்று கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications