Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்
மதுரை: மதுரை மத்திய தொகுதிக்கு நான் சம்பந்தமில்லாத வேட்பாளரா? ஏன் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வேட்பாளராக களமிறங்கிய போது அவர் மட்டும் அந்த ஊர்க்காரரா என்ன? என சுந்தர்.சி. கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியின் புதிய நீதி கட்சி வேட்பாளராக இயக்குநர் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்றைய தினம் தனது மனைவி குஷ்புவுடன், வேட்பாளர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் உடனிருந்தார். சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை எங்கள் எல்லாருக்குமே வந்துவிட்டது.
மதுரை மக்கள் என்னை வெற்றி வேட்பாளராக நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சட்டசபைக்கு என்னை அனுப்புவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். நாளை என்டிஏ கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு எங்கள் பிரச்சாரம் முழுவீச்சில் ஆரம்பிக்கும். வெற்றி வாய்ப்பு 100-க்கு 200 சதவீதம் உள்ளது.
நான் வந்தது முதல் மக்கள் அவ்வளவு அன்பாக வரவேற்கிறார்கள். 10 ஆண்டுகளாக ஒரே எம்எல்ஏ உள்ளார். மதுரை மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை. மக்கள் மாடமாளிகை கட்டித் தாங்க என யாரையும் கேட்கவில்லை.
அவர்கள் கேட்பது சுத்தமான குடிநீர், சுகாதாரம், நல்ல சாலைகள், கழிவுநீர் பிரச்சினை இல்லாதது உள்ளிட்டவைகளைத்தான் கேட்கிறார்கள். அடிப்படை தேவைகளை கூட இந்த அரசாங்கம் நிறைவேற்றாமல் இருக்கிறது. மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நல்ல மேம்பாலங்கள் தேவை.
மதுரை வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் எந்த நன்மையையும் செய்யாமல் லஞ்சம், ஊழல்தான் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னை என்றால் தமிழின் தலைநகரம் மதுரை! இந்த நகரம் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான நான் வெல்ல வேண்டும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், "தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை வேட்பாளராக்கி பிடிஆரின் வெற்றியை உறுதி செய்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்" என கனிமொழி விமர்சனம் செய்தது குறித்து கேட்டனர்.
அதற்கு சுந்தர் சி, "ஏங்க அவங்க தூத்துக்குடியில் போட்டியிட்டார்களே, அவர் தூத்துக்குடிக்காரரா? அவங்க சென்னைக்காரங்க, வேட்புமனு தாக்கல் செய்த போதுதான் தூத்துக்குடிக்கே வந்தாங்க. அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா,
நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். மதுரைக்காரர்கள் கெட்டது நினைப்போருக்கு கூட நல்லது செய்வார்கள். ஆனால் நான் நல்லது செய்ய மதுரைக்கு வந்துள்ளேன். மதுரை மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.
நான் இனி மதுரைக்காரன், இங்கேயே வீடு பார்த்துவிட்டேன். மாதத்தில் 15 நாட்கள் நான் மதுரையில்தான் தங்க போகிறேன். நான் வெளியூர்காரன் என சொன்னால் அது பழமையான வாதம். ஏனென்றால் உலகம் சுருங்கிவிட்டது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணி நேரம்தான் ஆகும். என் சொந்த ஊர் பழனி. நான் வளர்ந்தது கோவையில், என் அம்மாவுக்கு திருச்சி சொந்த ஊர், என் பிழைப்பு சென்னையில், இப்ப சொல்லுங்க நான் எந்த ஊர்க்காரன்? நான் தமிழ்நாட்டுக்காரன், மதுரை தமிழ்நாட்டில்தானே இருக்கிறது" என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications