நானே வாரத்துல 6 நாள் கறி சோறு சாப்பிடுவேன்!.. எம்எல்ஏவானதும் கறி விருந்துதான்! சுந்தர்.சி கலகல
மதுரை: வாரத்தில் 6 நாள் கறி சோறு சாப்பிடும் நான், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவானதும் எப்படி கறி கடைகளை மூடுவேன் என அந்த தொகுதி வேட்பாளர் சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார். தான் வென்றால் அனைவருக்கும் கறி விருந்து வைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. இதில் என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சினிமா இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார்.

இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், நான் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததும் இந்த தொகுதியிலா என்று கேட்டு எதிர்ப்பு கிளம்பியது. "அவரை" எதிர்த்து போட்டியிட முடியாது என்றனர். அவர் என்ன எம்ஜிஆரா, அவர் பிடிஆர்தான்.
திமுகவினரிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்காகத்தான் இருக்கிறது. என்னை வெளியூர்காரன் என்கிறார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தனர். இந்த பகுதி மக்கள் தங்கள் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்ததே இல்லை என்கிறார்கள்.
நான் வென்றால் மதுரை மீனாட்சி கோவில் அருகே உள்ள இறைச்சிக் கடைகளை மூடுவேன் என கூறியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மீதி 6 நாளும் கறி சோறு சாப்பிடுபவன், நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு கறி விருந்து அளிப்பேன் என பேசினார்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது சுந்தர்.சி பேசுகையில், வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை எங்கள் எல்லாருக்குமே வந்துவிட்டது.
மதுரை மக்கள் என்னை வெற்றி வேட்பாளராக நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து சட்டசபைக்கு என்னை அனுப்புவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். நாளை என்டிஏ கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு எங்கள் பிரச்சாரம் முழுவீச்சில் ஆரம்பிக்கும். வெற்றி வாய்ப்பு 100-க்கு 200 சதவீதம் உள்ளது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், "தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை வேட்பாளராக்கி பிடிஆரின் வெற்றியை உறுதி செய்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்" என கனிமொழி விமர்சனம் செய்தது குறித்து கேட்டனர். அதற்கு சுந்தர் சி, "ஏங்க அவங்க தூத்துக்குடியில் போட்டியிட்டார்களே, அவர் தூத்துக்குடிக்காரரா? அவங்க சென்னைக்காரங்க, வேட்புமனு தாக்கல் செய்த போதுதான் தூத்துக்குடிக்கே வந்தாங்க. அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா, நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். மதுரைக்காரர்கள் கெட்டது நினைப்போருக்கு கூட நல்லது செய்வார்கள். ஆனால் நான் நல்லது செய்ய மதுரைக்கு வந்துள்ளேன். மதுரை மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். நான் இனி மதுரைக்காரன், இங்கேயே வீடு பார்த்துவிட்டேன். மாதத்தில் 15 நாட்கள் நான் மதுரையில்தான் தங்க போகிறேன். நான் வெளியூர்காரன் என சொன்னால் அது பழமையான வாதம். ஏனென்றால் உலகம் சுருங்கிவிட்டது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணி நேரம்தான் ஆகும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications