இங்கே எதிர்ப்பு அங்கே கூட்டணி..பாஜக திமுக டீல்! உதயநிதிக்கு ஜால்ரா போடவா நாங்கள்? உதயகுமார் காட்டம்!
மதுரை: சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவலர் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லை எனவும், உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து தூக்கி ஏறிந்த ஸ்டாலின் அரசை, மக்கள் தூக்கி ஏறிய தயாராகி விட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணனூர் மு.ஆண்டிப்பட்டி கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழகத்தில் பூத் வாரியாக கிளைக்கழகங்கள் அமைத்து ஒரு மிகச் சிறந்த கட்டமைப்பை எடப்பாடி உருவாக்கி வருகிறார், இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் தினந்தோறும் மக்களை சந்தித்து திமுக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும்
சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்து அவசர பொது கேள்விக்கு எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்த பொழுது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார் அப்போது எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தார். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர் உயிர் பறிக்கப்படுகிறது. தை பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் முத்துகுமார் படுகொலை செய்யப்படுகிறார் இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது, இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் கடமையாகும். கேள்வி நேரம் முடிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் என்னிடம் பதில் உள்ளது. ஆனால் கேள்வி கேட்ட முறை சரி இல்லை என்று கூறுகிறார். அப்படி என்றால், வெற்றிலை பாக்கு வைத்து மேளதாளம் சீர் வரிசை வைத்து உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் கொலைக்கு காரணம் கூறுங்கள் என்றா கேட்க முடியும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்காமல் அவர் தாத்தாவா கேள்வி கேட்பார்.
உங்களிடம் பதில் இல்லை என்றாலும் பரவாயில்லை. இதுகுறித்து மக்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டாமா? இன்றைக்கு காவலர் மரணத்திற்கு கூட பதில் சொல்ல தெம்பும், திராணியும் கூட முதலமைச்சருக்கு இல்லை. கேள்வி கேட்ட எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக நீங்கள் வெளியே அனுப்புகிறீர்கள். இந்த சர்வாதிகாரம் நிலைத்து நின்றது இல்லை. எதிர்க்கட்சிகள் குற்றம் குறையை வைக்க கடமை உள்ளது. ஒரு நாள் எங்களை சஸ்பெண்ட் செய்து வெளியே தூக்கி ஏறிந்தீர்கள். ஆனால் மக்கள் உங்களை தூக்கி ஏறிய தயாராகி விட்டனர்.
எதிர்க்கட்சியின் குரலை அடக்க முடியாது. இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அதிமுக இருக்கக் கூடாது. ஏனென்றால் குறுக்கே கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாது என்று சபை காவலரை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது. இறந்த காவலர் குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்கிட வேண்டும்.
பட்டத்து இளவரசர் உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை. குற்றம் குறைகளை தோலுரித்துக் காட்டும் நபராக எடப்பாடி உள்ளார். உதயநிதி அவரது மானிய கோரிக்கையில் காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். இன்றைக்கு டெல்லியில் மத்திய அமைச்சரை எடப்பாடியார் சந்தித்ததால் திமுக அமைச்சர்கள் எல்லாருக்கும் காய்ச்சல் வந்துவிட்டது.
டில்லியில் உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்ததற்கு ஆயிரம் காரணங்களை சொல்கிறார்கள், இன்றைக்கு 100 நாள் திட்டத்தில் வாழ்வாதாரம் குறித்து எடப்பாடியார் நிதி கேட்டுள்ளார். அதேபோன்று கல்வி நிதி, பல திட்டங்களுக்கு நிதி தாருங்கள் என்று கேட்டுள்ளார். சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றது. இதையும் சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியார் ,காவிரி போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைகள் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தீர்வு காணாமல், சென்னையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார். இதே எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து காவேரி பிரச்சனைக்காக அவையை முடக்கினார். தற்போது அவையை முடக்க வேண்டாமா? இங்கே எதிர்ப்பு, அங்கே கூட்டணி என்று தான் ஸ்டாலின் உள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications