ஜனவரியில் அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகள்.. எதிரிகள் திக்குமுக்காட போகிறார்கள்.. ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: அதிமுக கூட்டணிக்கு ஜனவரி மாதத்தில் எதிர்பார்க்காத சில கட்சிகள் வர உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுகவை குழிதோண்டி புதைக்கும் பணியில் யாராவது ஈடுபட்டால் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, சரியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சில முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காட வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கூட்டணி அழைப்பை தவெக தலைவர் விஜய் நிராகரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதை உறுதி செய்துவிட்டன. ஆனால் தேமுதிக இதுவரை எந்தவொரு பதிலையும் வெளிப்படையாக கூறவில்லை.

இதனிடையே தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இப்படியான சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் இருந்து இம்முறை சிவகாசி தொகுதிக்கு மாறப்போவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், 2 கோடி அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லோரும் அதிமுகவை காட்டிக் கொடுக்கிறார்கள். இயக்கத்தை காட்டிக் கொடுத்துவிட்டு மாற்றானோடு சேர்ந்து கூத்தடிக்கும் வேலையை செய்பவர்களை, எப்படி அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? குறை இருந்தால் எடுத்துச் சொல்லலாம், இயக்கத்தையே குழி தோண்டி புதைக்க நினைப்பது எப்படி சரியாக இருக்கும்?
எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுதான் அதிமுகவின் குரல். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குரலாகவும், அதிமுக தொண்டர்களின் குரலாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆகவே அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிமுகவில் எத்தனையோ பேர் நீக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் உள்ளார்கள்.
அதிமுகவில் இருந்து நீக்குவது, சேர்ப்பது எடப்பாடி பழனிசாமியின் கடமை. கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தலைவராக வரக்கூடியவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயக்கத்தை குழி தோண்டி புதைக்கும் பணியை செய்தால், பொதுச்செயலாளர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு 100 சதவிகிதம் உண்மையான முடிவு.
அதிமுக கூட்டணிக்கு ஜனவரியில் எதிர்பாராத பல கட்சிகள் வர உள்ளது. அதை இப்போதே தெரிவித்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. ஆகவே எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அறிவித்து எதிரிகளை திக்கு முக்காட வைக்க போகிறார். அதிமுக பாஜக கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு சரியான களத்தை தேர்ந்தெடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications