விறுவிறு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி.. சிறப்பு பரிசு என்ன தெரியுமா?
மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 1200 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 700 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், மாடு பிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது. மாடுகளுக்கும் அதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு இந்த போட்டிக்காக பரிசுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பல சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா வருடமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டு வரும் பரிசுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் வெறும் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போதெல்லாம், கார், பைக், ஏசி என்று மிகவும் விலை அதிகமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்: சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடக்கும் போட்டிகளை துவக்கி வைத்துள்ளார்.
பாலமேடு: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட் நேற்று நடந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக நடந்தது. உயிரிழப்புகள் இன்றி சிறப்பாக நடந்தது.
வரலாறு: ஜல்லிக்கட்டு தமிழ் பாரம்பரியத்தில் நீண்ட வரலாறு கொண்டது ஆகும். இது கிமு 400-100 முதல் நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது. பண்டைய தமிழ்நாட்டின் 'முல்லை' பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடியினர் மக்களிடையே இது ஒரு கலாச்சார சடங்கு. பின்னர், இது துணிச்சலை வெளிப்படுத்தும் தளமாக இந்த ஜல்லிக்கட்டு மாறியது.
போக போக இளைஞர்கள் இதில் பங்கேற்பதை ஊக்குவிப்பிற்காக பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை சித்தரிக்கும் சிந்து சமவெளி நாகரீகத்தின் முத்திரை, புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைக் கயோலின் குகை ஓவியம், காளையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு தனி மனிதனைச் சித்தரிப்பது, சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரலாற்று ரீதியாகவும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது உறுதியாகி உள்ளது. இதில் பாலமேடு ஜல்லிக்கட்டு பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
வழக்கு: கடந்த வருடம்தான் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இதில் தமிழ்நாடு அரசு வென்றது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு ஒன்று இது கலாச்சாரம் என்று சட்டம் இயற்றி உள்ளது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத்தின் முடிவை, அதன் பார்வையை நாங்கள் எதிர்க்க மாட்டோம், மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். தொன்மையான ஒரு கலாச்சாரம் இது என்று சட்டமன்றம் அவசர சட்டத்தில் முடிவு செய்துள்ளது. அவர்களின் சட்டத்தில் இது தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிகட்டு போட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் என மாநில அரசு கருதினால் அதில் நீதிமன்றத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தொன்மையான கலாச்சார ரீதியான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த தீர்ப்பில் வென்ற நிலையில் இந்த வருடம் பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications