மதுரை லாக்-அப் மரணத்தில் திருப்பம்! ஓட்டுநர் முதுகில் 5 காயம், கழுத்தில் ஊசி தடயம்! பிரேத பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீஸார் தரப்பில் இது தற்கொலை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், பாலகிருஷ்ணனின் உடலில் இருந்த காயங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

பின்னணி என்ன?

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42). இவர் மதுரையைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி ஒருவரின் சரக்கு லாரியை ஓட்டி வந்தார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். உசிலம்பட்டி அருகே வலந்தூர் கண்மாய் பகுதியில் வந்தபோது, லாரியில் திடீரென தீப்பிடித்து ஏலக்காய் மூட்டைகள் எரிந்து நாசமாகின.

Chekkanurani police station custodial death

இது தொடர்பாக வலந்தூர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில், லாரியில் இருந்த 162 ஏலக்காய் மூட்டைகளில் சுமார் 2.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 67 மூட்டைகள் மாயமாகி இருப்பதாகவும், லாரியின் ஜி.பி.எஸ் கருவிகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறி சரக்கு நிறுவன மேலாளர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

இந்தப் புகாரின் அடிப்படையில் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்களாக பாலகிருஷ்ணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முதல் இரண்டு நாட்கள் தனது மனைவி சுதாவுடன் சென்ற அவர், இரவில் வீடு திரும்பினார். ஆனால், மூன்றாவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) இரவு பாலகிருஷ்ணன் மட்டும் தனியாக விசாரணைக்குச் சென்றார்.

இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், சனிக்கிழமை அதிகாலை சுமார் 6 மணியளவில் காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

தனது கணவரை போலீஸார் கடுமையாகத் தாக்கி, ஏலக்காய் திருட்டை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக மனைவி சுதா குற்றம் சாட்டினார். மேலும், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், போலீஸார் அடித்தே கொன்றுவிட்டதாகவும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நீதித்துறை நடுவர் ஆனந்த் ராஜ் முன்னிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பாலகிருஷ்ணனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர். தற்போது வெளியாகியுள்ள அந்தப் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன:

பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியில் 5 வெவ்வேறு இடங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக் கட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கழுத்தின் வலது பக்கத்தில், கயிறு இறுக்கிய தடயத்திற்கு அருகே ஊசியால் குத்தப்பட்டது போன்ற 3 மர்மக் காயங்கள் காணப்படுகின்றன.

கழுத்தின் இரு பக்கங்களிலும் சாய்வாக சுமார் 27 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கயிற்றால் இறுக்கப்பட்ட தடம் பதிந்துள்ளது. பிரேத பரிசோதனையில் பாலகிருஷ்ணனின் மூளையில் வீக்கமும், ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவரது இதயம் இயல்பான அளவை விடப் பெரிதாக வீங்கியிருந்ததாகவும், இதயத்தின் வலது அறைகளில் ரத்தமும், ரத்தக் கட்டுகளும் உறைந்து காணப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை தீவிரம்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன் மற்றும் கலைச்செல்வி ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, கொலை வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+