நாளை திருமணம்.. இன்று அதிகாலையில் மணமகன் கண்முன்னே உயிரிழந்த மணப்பெண்.. மதுரை அருகே சோகம்!
மதுரை: நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் மணப்பெண், மணமகனின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண் மரிய வெல்சியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, கார் ஒன்றின் டயர் வெடித்து பைக் மீது மோதியுள்ளது. இதில் மணப்பெண் பலியான நிலையில் மணமகன் ஜெப பாஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா (26) ஆகிய இருவருக்கும் நாளை செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வெல்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு காமலாபுரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு அருகே அவர்கள் வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்புற டயர் வெடித்ததால் கார் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியது.
இதில் ஜெப பாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மணப்பெண் மரிய வெல்சியா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் கண் முன்னே மணப்பெண் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
