மண்டைக்கேறிய மதுபோதை..வருவோர் போவோரையெல்லாம் தாக்கிய இளைஞர்கள்! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
மதுரை: மதுரையில் மது போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை, தட்டி கேட்ட நகைக்கடை உரிமையாளரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் குடிபோதையில் இளைஞர்கள், மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் சித்திரை திருவிழாவின் போதும், அதற்குப் பிறகும் கஞ்சா போதையில் இளைஞர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டதோடு, சாலையில் சென்ற மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
குறிப்பாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், சாலையில் சென்றவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒத்தக்கடையில் தொடரும் இதுபோன்ற சம்பவத்தால் இரவில் வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரையில் மது போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை, தட்டி கேட்ட நகைக்கடை உரிமையாளர் மண்டை உடைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாக இருந்தது வரும் இந்த பகுதியில் நேற்று மதியம் மது போதையில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஆனது சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி கொண்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டு சென்றுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
அப்போது அங்கு இருந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் அவர்களை தட்டி கேட்டதால் அவரை சரமாரியாக தாக்கி காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போதையில் இருந்த கும்பல் அங்கிருந்த மேலும் பல வண்டிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றது. இந்த நிலையில் அவர்கள் ரகளையில் ஈடுபடுவதும் உரிமையாளரை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதீத போதை காரணமாக அந்த இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், அருகில் வசிக்கும் மற்றொரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் வந்த அவர்கள் வாகனங்கள் மீதும் வியாபாரிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மதுரையில் உள்ள நகர் பகுதிகளில், வியாபார பகுதிகளில் பகல் நேரங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியை திவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.











Click it and Unblock the Notifications