ஏலக்காய் லாரியில் பற்றிய தீ.. காவல்நிலையத்தில் பறிபோன உயிர்! விடாமல் போராடிய உறவினர்கள்! ட்விஸ்ட்!
மதுரை: லாரி தீப்பற்றி எரிந்த வழக்கு தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு 4 நாட்களாக உறவினர்கள் போராடி வந்த நிலையில், இன்று உடலைப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் கடந்த 3 ந்தேதி தேவாரத்தில் இருந்து 2.5 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூடைகள் ஏற்றி வந்த போது உசிலம்பட்டி - மதுரை சாலையில் உள்ள வாலாந்தூர் கண்மாய் கரை அருகே லாரி தீப்பற்றி எரிந்தது.

இதுதொடர்பாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வாலாந்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளரான செக்கானூரணி காவல் ஆய்வாளர், முத்து பாலகிருஷ்ணனை 13 ந்தேதி இரவு விசாரணைக்காக அழைத்து வந்து காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்திருந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 14ஆம் தேதி அதிகாலையில் காவல் நிலைய கழிப்பறைக்கு சென்ற பாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த ஓட்டுனரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் உரிய நீதி கேட்டு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக பணியிலிருந்த காவல் ஆய்வாளர் முத்து மற்றும் தலைமை காவலர் பழனிவேல் ராஜன் பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்தும் , இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்கு பிறகு கடந்த நான்கு நாட்களாக அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் இருந்து அவரது உடல் பெறப்பட்ட பிறகு அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ஓட்டுனர் பாலகிருஷ்ணனின் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்து இருக்க கூடிய நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறை அருகே மதுரை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுனரின் பாலகிருஷ்ணனின் உடல் தேனி மாவட்டம் செல்லும் வரை இடையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு காவல் துறையினுடைய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
