இருக்குறதே போதும்! தமிழகத்தில் இனி புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது! மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
மதுரை: தமிழகத்தில் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். திருச்சியை சேர்ந்த ஒருவர், புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தாக்கல் செய்த பொது நல வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் நவக்கிணத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தங்களது கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை (PIL) தொடர்ந்தார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "திருச்சி நல்லம்பிள்ளை கிராமம் நவகிணத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது" என உத்தரவிடக் கோரினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தமிழகத்தில் ஏற்கெனவே அதிக அளவிலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் புதிய கடைகளை திறக்க வேண்டியதில்லை. எனவே பொது மக்களின் நலன் கருதி, இனி தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கவே கூடாது" என உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழிபாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே இருந்த 717 கடைகள் மூட கடந்த மே மாதம் உத்தரவிடப்பட்டது. முன்னதாக 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அவற்றில் 717 கடைகள் மூடியதால் 4,048 ஆக குறைக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
