அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ்
மதுரை: அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆபெல் மூர்த்தி என்பவர் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். குவாரி தொடர்பான அரசாணையில், அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.25 அபராதம் என சலுகை உள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கனிமவளத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆபெல் மூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் ஏராளமான கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளால் அருகில் உள்ள கிராம மக்களுக்கு சுவாச பிரச்சினை, தூக்கமின்மை, இதய கோளாறு, காதுகேளாமை உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் குவாரிகள் செயல்படும் பகுதிகளில் விவசாயம் அழிக்கப்படுவது தொடர்கிறது. அத்துடன் குவாரிகள் உருவாகுவதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற கல் குவாரிகளில் விதிமீறல்கள் அதிமாக உள்ளன.

அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்களை வெட்டி எடுப்பது, அனுமதி பெறாத பகுதிகளில் குவாரிகளை நடத்துவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இந்தநிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் (கடந்த ஆட்சியில்) கனிமவளத்துறை ஒரு அரசாணை பிறப்பித்து இருந்தது.
அதாவது விதிமீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகளுக்கு குறைந்த அபராத தொகை (அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் ஒரு டன் கற்களுக்கு ரூ.25 வீதம் அபராதம்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதே போல அபராதத்தொகையில் 20 சதவீதத்தை செலுத்தி மீண்டும் குவாரியை செயல்படுத்தலாம். அபராத தொகையை 2 மாதத்துக்கு ஒருமுறை என 6 கட்டங்களாக செலுத்தலாம் என்பது உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருககிறது. இதுபோன்ற சலுகைகளால் சட்டவிரோத குவாரிகளை நடத்துபவர்கள் கடும் தண்டனையில் இருந்து தப்பிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது.
இதன்மூலம் சட்டவிரோத குவாரிகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். இந்த அரசாணையால் சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
சட்டவிரோதக் குவாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கமே, அவர்களுக்குச் சலுகை அளிப்பது போன்ற அரசாணைகளைப் பிறப்பிப்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, இந்த வழக்கில் கனிமவளத்துறை அளிக்கப்போகும் பதில் மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புதான், தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும்












Click it and Unblock the Notifications