லாக்கப் மரணம்! குடும்பத்தினருக்கு அரசு வேலை.. போலீசார் மீது கொலை வழக்கு - சிபிஎம் வலியுறுத்தல்
மதுரை: விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வலியுறுத்தியுள்ளது.
என்னதான் தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வர, சிபிஎம் ஆதரவு கொடுத்திருந்தாலும்.. சமீப நாட்களாக சிபிஎம் வைக்கும் விமர்சனங்கள் தவெக அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த காவல் நிலைய மரணம் குறித்தும் அறிக்கை விடுத்திருப்பது.. தவெக தலைமையை சூடாக்கியிருக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுத்திருக்கும் அறிக்கையில், "தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், தனியார் டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 3 ஆம் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இவரது வாகனம் உசிலம்பட்டி-மதுரை சாலையில் வாலாந்தூர் கண்மாய் கரை அருகே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, சம்பவத்திற்குத் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கும், விசாரணைக்கு உதவுவதற்கும் பாலகிருஷ்ணன் மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் நவம்பர் 11 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாகக் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணனின் இறப்பு குறித்து காவல்துறையினர் கூறும் தகவல்களை ஏற்க மறுத்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பாலகிருஷ்ணனின் லாக்கப் மரணம் குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அல்லது புகார் அளிக்க வருபவர்கள் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் காவல்துறையில் உரிய சீர்த்திருத்தங்கள் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
