ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை கொடுத்தார்களா? தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவருக்கு உரிய சிகிச்சையை கொடுத்தார்களா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை கொடுத்தனரா? முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு செல்ல யார் காரணம்?

ஜெயலலிதா தொடர்பாக எங்களிடம் ஆயிரம் கேள்விகள் உள்ளன. செல்வாக்கோடு இருந்த தினகரன், ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அனைத்தையும் இழந்துவிட்டார்.
அமைச்சர்களின் ரகசிய கோப்புகள் கிழிந்து எரிக்கப்பட்டதாக டிடிவி தினகரன் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நானும் ரவுடிதான் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
அதிமுகவை அபகரிக்க தினகரன் முயற்சித்திருந்தார். அது நடக்காததால் விரக்தியில் பேசியுள்ளார். அமமுகவை தொடங்கிய டிடிவி தினகரன் எத்தனை பேரை எம்எல்ஏவாக்கினார்? டிடிவி தினகரனுடன் சென்ற செந்தில் பாலாஜி திமுகவில் ஏன் இணைந்தார்.
18 எம்எல்ஏக்களும் அரசியல் அனாதைகளாகிவிட்டால் நிலை என்ன? விசுவாசம், துரோகத்தை பற்றி டிடிவி பேசுவது நகைப்பாக இருக்கிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்த திமுக- தவெக இடையே போட்டி என தினகரன் பேசியுள்ளார்.
திமுகவை எதிர்க்கும் பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணியை அமைப்போம். இவ்வாறு உதயகுமார் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று அடையாறு வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள். அங்கு அந்த சம்பவம் நடந்த போது சசிகலா சிறையில் இருந்தார். கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன்.
எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார். கொடநாடு பங்களாவில் எந்த கோப்புகளை தேடினார்கள். முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.
அந்த கோப்புகளை நானும் மருத்துவர் வெங்கடேசனும் கிழித்தெறிந்தோம். கொடநாடு கொலை, கொள்ளை நடந்த போது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது?
ஜெயலலிதா ஆட்சி செய்த போது ஸ்பெஷல் பிராஞ்சில் உளவுத் துறை ஐஜி அல்லது டிஜிபியாக இருப்போர் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய விவரங்களை கோப்புகளாக அளிப்பார்கள். அவைதான் போயஸ் கார்டனில் இருந்தது.
இதை படித்து பார்த்து கிழித்து போட்டிருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பிளாக்மெயில் செய்பவர்கள் அல்ல, நாங்கள் சாட்டையோ சவுக்கோ கிடையாது. எங்கள் சித்தி சசிகலா சொன்னதன் பேரில் அவற்றை படித்து பார்த்துவிட்டு கிழித்தோம். அந்த கோப்புகளில் நிறைய அமைச்சர்களின் வண்டவாளங்கள் எல்லாம் இருந்தன. யாரோ கொடநாட்டில் இருப்பதாக பொய் சொல்லியிருக்கிறார்கள். அந்த பயத்தில்தான் அவர் அங்கு போய் தேடியுள்ளார்.
இந்த ஃபைல்களை எல்லாம் எடுத்து தினகரன் வெளியே விட்டுவிடுவாரோ என நினைத்துள்ளனர். யாரையும் பயமுறுத்த வேண்டும் என்ற கேவலமான புத்தி எங்களுக்கு கிடையாது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவருக்கு பச்சை நிற கவரில் உளவுத் துறை சார்பில் அளிக்கப்படும். இந்த ஃபைல்களை எரித்தது தெரியாமல் பாவம் பழனிசாமி அங்க போய் தேடியிருக்கிறார் என தினகரன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications