"ஐயா லியோனி வந்து இருக்கேன்யா, நான் வளர்த்த பிள்ளை என்று சொல்லுவீங்களே"! கதறிய Dindigul Leoni
மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் திண்டுக்கல் லியோனி. தனது ஆசானை தேடி வந்த அவர் சாலமன் பாப்பையாவின் உடலை பார்த்து ஐயா ஐயா என கலங்கி அழுதார். அவருடன் மனைவியும் கதறினார்.
பட்டிமன்ற நடுவர் திண்டுகல் லியோனி சாலமன் பாப்பையா அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு அழுதபடியே வந்து பாதத்தை தொட்டு வணங்கி ""ஐயா லியோனி வந்து இருக்கேன்யா, நான் வளர்த்த பிள்ளை என்று சொல்லுவீங்களே" என்று கதறி அழுதபடி மாலை அணிவித்து கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

அதன்பின்பு திண்டுக்கல் லியோனி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: தமிழ் தாய் தனது மகனை இழந்து வாடுகிறது. நான் அறிவியல் ஆசிரியர் எனது திறமையை அங்கீகரித்து தனியாக செயல்பட வழிதுணையாக நின்றவர்.
மேடையில் எனது பாடல்களை கேட்டு முதுகில் தட்டி கொடுத்து உற்சாக படுத்தியவர். பட்டிமன்ற பேச்சாளர் மட்டுமல்ல இலக்கிய எழுத்தாளர் பட்டுக்கோட்டையார் பாடல்கள், கண்ணதாசன் பாடல்களை படித்தும், சங்க இலக்கியங்களையும் , திருக்குறளையும் எளிமையான வகையில் மக்களுக்கு தொகுப்புரை எழுதினார்.
செம்மொழி மாநாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். கருணாநிதி மூன்று மணி நேரம் அமர்ந்து பாப்பையாவின் பட்டிமன்றங்களை ரசித்தது எங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தமிழுக்காகவே வாழ்ந்து தனது வாழ்க்கை அர்ப்பணித்தவர். அவருக்கு தமிழ்நாடு அரசின் மரியாதையை வழங்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூத்த மேடைப் பேச்சாளர் இலக்கியவாதி , அவருக்கு இறுதி சடங்கு தொடங்கும் நேரத்தில் அரசு உடனடியாக அரசு மரியாதை வழங்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள இலக்கிய வாதிகளின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது சீடர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார். இதையடுத்து சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இதற்கு திண்டுக்கல் லியோனி நன்றி தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அதில் பாரதி பாஸ்கர் பேசுகையில், "கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது அவ்வளவு உற்சாகமாக இருந்தார். இப்படி ஒரு நாள் வரும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து, எங்களை எங்கேயோ கொண்டு போய் வைத்தவர்.
அவரது புகழையெல்லாம் எங்களுக்கும் அளித்தவர். இன்று அவரது பிள்ளைகளாகிய நாங்கள் திசை தெரியாமல் நிற்கிறோம். அவர் என்றென்றைக்கும் எங்களுக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த மதுரையையும், மதுரையின் மீனாட்சியையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். "ஒன்றுபரம்பொருள் நாம் அதன் மக்கள், உலகு இன்பக்கேணி" என்ற மகாகவி பாரதியின் வரிகளை அவர் எப்போதும் மேடைகளில் சொல்லிக் கொண்டிருப்பார்.
மதம் உள்ளிட்ட எந்த காரணத்தாலும் மக்கள் பிளவுபடுவதை சாலமன் பாப்பையா விரும்பியதில்லை. எல்லோரும் ஒன்றுதான் என்ற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அவர் மிகவும் விரும்பிய மகாகவி பாரதியின் நினைவு நாளன்றே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் நீண்ட நாட்கள் படுத்திருந்து அவதிப்படவில்லை. அப்படியே இயல்பாக வாழ்ந்து, அப்படியே இந்த உலகத்திலிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டார்.
மிக மகோன்னதமாக வாழ்ந்தார்; மிக மகோன்னதமாகவே இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சாலமன் பாப்பையா எப்போதும் வாழ்வார் என பாரதி பாஸ்கர் உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications
