தம்பியை படிக்க வைக்க காய்கறி விற்கும் 6-ம் வகுப்பு மாணவி... நிதியுதவி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.சரவணன்
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் காய்கறி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தம்பியின் படிப்புச் செலவுக்கு பணம் சேமித்து வருகிறார் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர்.
தாய் தந்தை இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் இந்தச் சிறுமிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நிதியுதவி வழங்கினார்.
இதையடுத்து அந்த சிறுமியின் இல்லத்திற்கே தேடிச் சென்ற திமுக எம்.எல்.ஏ. சரவணன், படிப்புச் செலவுக்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

6-ம்வகுப்பு மாணவி
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரத்தில் 6-ம் வகுப்பு மாணவி முருகேஸ்வரி என்பவர் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இவரது தாய் இறந்துவிட்ட நிலையில் தந்தையின் ஆதரவு இல்லை. இதனால் தனது பாட்டியுடன் முருகேஸ்வரியும், அவரது தம்பியும் வசித்து வருகிறார்கள். தம்பியை நன்றாக படிக்க வைத்து பெரிய உத்யோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கனவுடன் வாழும் முருகேஸ்வரி தனது தம்பியின் படிப்புச் செலவுக்காக காய்கறி விற்பனையில் ஈடுபட்டு பணம் சேமித்து வருகிறார்.

உதவிக்கரம்
சிறுமி முருகேஸ்வரி குறித்தும் அவரது குடும்ப பின்னணி பற்றியும் திருப்பரங்குன்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமி முருகேஸ்வரி இல்லத்திற்கு சென்ற சரவணன் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கி தைரியம் அளித்தார். மேலும், முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பி ஆகியோரின் படிப்புக்காக அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்றும் படித்து பெரியபொறுப்புக்கு வர வேண்டும் எனவும் அவர்களை ஊக்கப்படுத்தினார்.

வாழ்வாதாரம்
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இல்லாமல் இரண்டு பிள்ளைகளை (பேரன், பேத்தி) வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக முருகேஸ்வரியின் பாட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கியதோடு, முருகேஸ்வரியின் காய்கறி கடையில் ஒரு நாள் விற்பனையாகும் மொத்த காய்கறிகளையும் அவரே பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

எத்தனையோ பேர்
தாய், தந்தையற்ற 6-ம் வகுப்பு மாணவிக்கு திமுக எம்.எல்.ஏ. சரவணன் வீடு தேடிச்சென்று உதவியது வில்லாபுரம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் எத்தனையோ இளம் பிஞ்சுக்கள் குடும்பத்தின் வறுமையை நீக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு சினிமா, அரசியல் உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்கள் உதவ முன்வந்தால் இன்னும் பல சாதனையாளர்கள் உருவாவார்கள்.












Click it and Unblock the Notifications