மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் பெண் யூடியூபர் கைது.. தட்டி தூக்கிய போலீஸ்.. நடந்தது என்ன?
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்கை போன வழக்கில் பெண் யூடியூபர் மீனாட்சி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வரும் நிஷாந்திடம், பெண் யூடியூபர் மீனாட்சி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரை பைபாஸ் சாலையில் 2 வாரங்களுக்கு பின் தனுஷ்க் நகைக்கடை திறக்கப்பட்டது. இந்த நகைக்கடையில் நேற்று முன் தினம் இரவு 3 மணி அளவில் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கும் அதிகமாக தங்கம், வைர நகைகளை கொள்ளை அடித்தார். கல் வைத்த நகைகள், அலாரம் அடிக்கும் நகைகளை விட்டுச் சென்ற கொள்ளையன், சரியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் கொள்ளை அடித்தார்.

இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்றது. சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் நகைக்கடையில் திருடிய நபர் சிசிடிவி காட்சிகள் அடைப்படையில் அடையாளம் காணப்பட்டார். அந்த நபரின் பெயர் நிஷாந்த் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
நிஷாந்த் தலைமறைவாக இருக்கும் சூழலில், அவர் திருடுவதற்கு முன் 2 முறை நகைக்கடைக்கு வந்திருக்கிறார். இதனால் நகைக் கடை ஊழியர் அடையாளம் கண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிஷாந்துடன் தொடர்பில் இருந்த சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. நகைக்கடையில் திருடிய பின் நிஷாந்த், தொலைபேசி வாயிலாக மீனாட்சியை தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி என்பவர் யூடியூபர் என்பதும் தெரிய வந்துள்ளது. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் மற்றும் யூடியூபர் மீனாட்சி ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பின், கொள்ளையில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலும் சில தகவல் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த கொள்ளையில் பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதப் பொருளாகவும் மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
