மதுரை மேயர் பதவி.. மகனுக்காக காய் நகர்த்தும் பைனான்சியர் அன்புச்செழியன்.. விஜய் சந்திப்பின் பின்னணி!
மதுரை: மதுரை வந்த முதல்வர் விஜய்யை பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அவரின் மகனுடன் சென்று வரவேற்றுள்ளார். விஜய்யின் பலப் படங்களுக்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்திருந்தாலும், திடீரென இந்த சந்திப்பு நடந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் நேற்று மதுரை வந்திருந்தார். மதுரை வந்த முதல்வர் விஜய்யை அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் வரவேற்றனர். இவர்களுக்கு பின் முதல்வர் விஜய்யை சினிமா பைனான்சியரான அன்புச்செழியன் தனது மகன் விவேக்குடன் இணைந்து வரவேற்றார்.

அப்போது விஜய்க்கு மீனாட்சியம்மன் சிலையையும் பரிசாக வழங்கினார். அதிமுக ஆதரவாளராக இருந்த அன்புச்செழியன் திடீரென தவெக பக்கம் நகர்வது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சினிமா பைனான்ஸ் தொழிலுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் விஜய்யை அன்புச்செழியன் சந்தித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் தவெகவினரிடம் விசாரித்த போது, அன்புச்செழியன் திடீரென்று எல்லாம் முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அன்புச்செழியன் தனது மகன் விவேக்கை அரசியலில் களமிறக்க முடிவு செய்துவிட்டார். திமுக, அதிமுக என்று அல்லாமல், தவெகவில் அவரது மகன் இணைந்து சீட் பெற விரும்பினார். இதற்கான ஏற்பாடுகளை அன்புச்செழியன் செய்து கொடுத்தார்.
தவெக தலைமையும் மதுரை தெற்கு தொகுதியில் அன்புச்செழியன் மகன் விவேக் தான் வேட்பாளர் என்று டிக் அடித்துவிட்டது. வேட்பாளர் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் திடீரென அன்புச்செழியன் தனது மகன் விவேக்கை பின் வாங்க வைத்தார். ஏனென்றால் அன்புச்செழியன் மகன் விவேக் தவெக சார்பாக போட்டியிடுவதை திமுக விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.
திமுக தரப்பில் முக்கியப் புள்ளிகள் கேட்டு கொண்டதால், உடனடியாக விவேக்கை பின் வாங்க வைத்தார் அன்புச்செழியன். இதன்பின் விஜய்யை சந்திக்க அன்புச்செழியன் தரப்பில் நேரம் கேட்கப்பட்ட போது, எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதன்பின் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், முதல்வரின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மூலமாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் விட்டதை லோக்சபா தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் பிடிக்க வேண்டும் என்று விவேக் விரும்புவதாக சொல்லப்படுகிறது. மதுரை மேயர் பதவி தனது மகனுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்புச்செழியன் காய் நகர்த்தக் கூடும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
