திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. சைலண்ட் மோடில் இருந்த விஜய்.. கடந்த ஆண்டு நடந்தது என்ன?
மதுரை: கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒரு முறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு இடைக்காலம் எனவும், வரும் காலங்களிலும் தீபம் ஏற்ற அனுமதியாக கருதக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது எனவும், தேவைப்பட்டால் சிஐஎஸ்எஃப் படையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளிக்கப்பட்ட பின், காவல்துறை 144 தடை உத்தரவு அமல்படுத்தி தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
இதன்பின் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சியின் போது திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு தீபம் ஏற்றக் கூடாது.. மலை உச்சியில் இருப்பது சர்வே கல் என்பதில் தீவிரமாக இருந்தது. தற்போது தவெக ஆட்சி அமைந்த பின்னரும் கூட, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்று பழைய நடைமுறையை பின்பற்றியது.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேசின. ஆனால் தவெக தரப்பில் இருந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. குறிப்பாக விஜய் திருப்பரங்குனறம் விவகாரம் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்தார்.
தற்போது அமைச்சராக இருக்கும் அருண்ராஜ் மட்டும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மட்டும் ஒருமுறை கூறி சென்றார். மற்றபடி விஜய் தொடங்கி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட பலரும் சைலண்ட் மோடில் இருந்தனர். தற்போதும் தமிழக அரசு தீபம் ஏற்றக் கூடாது என்று வாதிட்டு வந்த சூழலில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



Click it and Unblock the Notifications
