பெத்த தாயை இழிவா பேசிட்டாரு.. பாஜகவே விட்டாலும் ஆ.ராசாவை விடாத அதிமுக! செல்லூருக்கு வந்துச்சே கோபம்
மதுரை: ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆண்டிமுத்து ராசா இன்று ஆ.ராசாவாக மாறிவிட்டார் என்றும் பெற்ற தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா? எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M.கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்"ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.

விடியல்
அன்று எதிர்கட்சியாக இருந்த மு.க.ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அதிமுக ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் விடியல் தருகிறேன் என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார். நமக்கு விடியவே இல்லை. சட்டை கிழிந்து போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள். அது போல தான் மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் ஒட்டு சாலை போட்டார்கள்.

பிடிஆர்
தமிழகத்திற்கே நிதி கொடுக்கும் நிதியமைச்சர் மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை. திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள், கரண்ட் கொடுக்க வக்கில்லை. மின்சார கட்டணம் உயர்த்த வெக்கமில்லை, அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் ஈ கிடந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள்.

ஆ.ராசா
பெற்ற தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா? குங்குமம் வைத்தவர்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என ஆ.ராசா கூறினார். ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு இன்று ஆண்டிமுத்து ராசா இன்று ஆ. ராசாவாக மாறிவிட்டார்." என்று விமர்சித்தார். முன்னதாக ஆ.ராசாவை பெற்றதற்கு அவரது அம்மா வருத்தப்பட வேண்டும் என செல்லூர் ராஜு பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பேசினார் ஆ.ராசா
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்." என்று மனுஸ்மிருதியில் உள்ளதை சுட்டிக்காட்டி பேசியதால் இப்படி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications