மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் உள்பட 2 பேரை தூக்கிய போலீஸ்! 5 கிலோ நகைகளும் பறிமுதல்
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தற்போது இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உள்பட இருவர் கைது செய்யபப்ட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இருவரும் செல்போன் சிக்னல் மூலமாக சிக்கியது தெரியவந்துள்ளது.
மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மதுரை காளவாசல் பைபாஸ் பிரபல தனிஷ்க் தங்க நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 12 ஆம் தேதி முகமூடி அணிந்த நபர்கள் பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் கட்டிட பின்பக்க சாரம் மற்றும் லிஃப்ட் தடம் வழியாக உள்ளே புகுந்து தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மதுரையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் கடை உரிமையாளர் சந்தேகம் தெரிவித்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நிஷாந்த் என்பவரை நகைக்கடை உரிமையாளர் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததால் தொடர்ச்சியாக அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மீனாட்சி இன்ஸ்டா பிரபலம் என்பதும், தலைமறைவாக உள்ள நிஷாந்த் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு மீனாட்சியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். நிஷாந்தின் தந்தை மூலமாக 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.



Click it and Unblock the Notifications
