மீண்டும் இந்தி திணிப்பு .. மதுரை - திண்டுக்கல் சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை.. என்ன நடக்குது?
மதுரை: மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுமார் 30 கிமீ இணைப்புச் சாலை முழுவதும் இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில நெடுஞ்சாலை துறையின் பெயர்ப் பலகையில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளும் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சையாகி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஊர்களின் பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையாகியது. வழக்கமாக மாநில அரசின் வழிகாட்டு பலகைளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும்.

ஆனால் இம்முறை மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகைகளில் இந்தியும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடுமையான கண்டனம் எழுந்த சூழலில், இன்று காலை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் பெயர்ப் பலகைகளில் இருந்து இந்தியும் அழிக்கப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், இதுதான் மாற்றமா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடியை தொடர்ந்து மதுரையிலும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுமார் 30 கிமீ இணைப்புச் சாலை முழுவதும் இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விஷயத்தில் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தற்போது மதுரை - திண்டுக்கல் சாலையிலும் இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருப்பது எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால் இருமொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தவெக சமரசம் செய்து கொண்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல் நெடுஞ்சாலை துறையை கையில் வைத்துள்ள ஆதவ் அர்ஜுனா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் தனிச்சையாக எப்படி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
