ரயில் டிக்கெட் வாங்க முடியாதவராம் கருணாநிதி.! சொத்து வந்தது எப்படி.? எச்.ராஜா கேள்வி
மதுரை: சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்குக் கிளம்பிய ரயிலை வழியனுப்பி வைத்த ஹெச் ராஜா, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு காசி தமிழ்ச் சங்கமம் வெகு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசியில் இந்த தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதில் கலந்து கொள்பவர்களுக்காக பிரத்தியேக ரயில்களும் கூட இயக்கப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இப்போது அதேபோல சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டிற்கும் குஜராத்தின் சவுராஷ்டிராவுக்கும் இருக்கும் தொடர்புகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமத்தைப் போலவே இதில் கலந்து கொள்ளவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.அதன்படி மதுரையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்தோருக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச் ராஜா ஆளும் திமுக அரசை சரமாரியாகச் சாடினார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது திமுகவின் 17 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்.
இந்த பட்டியலில் இருக்கும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகிய 17 பேரும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் தங்களுடையது இல்லை... அதற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.. அதில் அவர்களுக்கு என்ன அச்சம். அண்ணாமலை சொன்ன சொத்து பட்டியலில் இருக்கும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என எந்தவொரு திமுக நிர்வாகியும் சொல்லி இருக்கிறாரா.. இல்லை.

கடும் தாக்கு: ரயில் டிக்கெட் எடுக்கக் கூட பணம் இல்லாமல் பயணித்தவர் தான் கருணாநிதி.. அதன் பின்னர் சினிமாவில் கதை எழுதியே பணத்தைச் சம்பாதித்தார். அப்படியிருந்த அவரது குடும்பத்தினருக்கு இத்தனை லட்சம் கோடி சொத்து எப்படி வந்தது. இதைத் தான் அண்ணாமலை கேட்கிறார். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால்.. தொடர்பு இல்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டுமே.. இல்லையென்றால் நீதிமன்றத்திற்குச் செல்லட்டும் வழக்கு தொடரட்டும்..
அண்ணாமலை வெளியிட்டது சொத்து பட்டியல் தானே தவிர ஊழல் பட்டியல் இல்லை. அவர் வெளியிட்டதை ஆய்வு செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 10 நாட்களுக்குப் பிறகு அண்ணாமலையிடமே கேளுங்கள்.. திமுகவினருக்கு ஊழல் செய்ததால் பணம் வந்தது. ஏற்கனவே திமுக அரசு கரும்பு ஒன்றுக்கு 13 ரூபாய் திருடிய அரசு என்பதை நானே நிரூபித்துள்ளேன். அப்படித் திருடித்தான் அவர்கள் இத்தனை கோடி சேர்த்துள்ளனர்" என்றார்.
முன்னதாக சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி எக்செல் சீட் ஒன்றை வெளியிட்டார். அதில் பல திமுக தலைவர்களின் சொத்து குறித்த தகவல்கள் இருந்தது. இருப்பினும், இதை திமுக தலைவர்கள் மறுத்துள்ளனர். அண்ணாமலை கூறியதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஆதாரத்தை நிரூபிக்கவில்லை என்றால் வழக்கு தொடரவுள்ளதாக திமுக சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications