முந்தைய நாள் ஒத்திகை! லிப்ட்டின் குறுக்கே இரும்பு ஸ்கேல்! மதுரை தனிஷ்க் நகை கொள்ளை நடந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் யூடியூபர் நிஷாந்த் தனியொருவனாக கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய நாளே ஒத்திகை பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு 15 கிலோ தங்க நகைகளை யூடியூபர் நிஷாந்த் என்பவர் கொள்ளையடித்துச் சென்றார். இவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை சுரேஷும், காதலி இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த கொள்ளையில் எந்த ஜன்னலையும் உடைக்காமல், நிஷாந்த் கொள்ளையை தனியாக அரங்கேற்றியது எப்படி என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம். தனிஷ்க் நகைக் கடைக்கு பல முறை வந்த நிஷாந்த் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.

Nishanth

வீடியோ எடுத்த நிஷாந்த்

இதையடுத்து நகைகளை அணிந்து காட்டி தனது சேனலுக்கு வீடியோ எடுத்தும் போட்டுள்ளாராம். இந்த நிலையில் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்னர் நிஷாந்த் ஒத்திகை பார்த்துள்ளார். அதாவது கடந்த 11ஆம் தேதி நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி நகைக் கடைக்கு பக்கத்தில் உள்ள கட்டடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து தனிஷ்க் நகைக் கடையின் மொட்டை மாடிக்கு தாவியுள்ளார்.

மொட்டை மாடி

இதையடுத்து மொட்டை மாடி நகைக்கடையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாகச் சென்று, லிப்ட் அருகே அமைக்கப்பட்டிருந்த "ப" வடிவ அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார். இந்த வழியில் சென்றால் எளிதாக கொள்ளையடித்துவிட்டு தப்பலாம் என நிஷாந்த் நம்பினார்.

அதிகாலை 3 மணிக்கு

அது போல் அடுத்த நாள் 12 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்கத்து கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு தனிஷ்க் கடையின் மொட்டை மாடிக்கு தாவினார். அதே போல் லிப்ட்டில் இருந்த இரும்பு தகட்டை அகற்றினார். பின்னர் அதே லிப்ட்டில் முதல் மாடிக்கு சென்றார். லிப்ட் லாக்காகாமல் இருக்க, அதன் குறுக்கே ஒரு இரும்பு ராடை வைத்தார். இதையடுத்து கடைக்குள் சென்ற அவர் எந்த அவசரமும் பதற்றமும் இல்லாமல் ஒவ்வொரு நகைகளாக எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டுள்ளார். பின்னர் அந்தப் பேக்கைத் தோளில் மாட்டிக் கொண்டு, மீண்டும் லிப்ட் ஷட்டரில் வைத்திருந்த கம்பியை அகற்றிவிட்டு, அதே வழியாகக் கயிற்றின் உதவியுடன் ஒவ்வொரு தளமாகச் சென்று இரும்புச் சாரம் வழியாக வெளியேறியுள்ளார்.

1 மணிக்கு வந்த போது நாய் துரத்தியது

முன்னதாக, நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த நாய்கள் அவரைத் துரத்தியதால் முதற்கட்ட முயற்சியைக் கைவிட்டுள்ளார். பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மேலே சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீனாட்சி நாச்சியார் பைக்

கொள்ளையடிப்பதற்காக தனது காதலி மீனாட்சி நாச்சியார் கொடுத்த பைக்கைப் பயன்படுத்திய நிஷாந்த், கொள்ளையடித்த நகைகள் இருந்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷைத் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு பேக் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைக்குமாறும் கூறியுள்ளார். சுரேஷ் அந்தப் பேக்கை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நிஷாந்த் மீண்டும் அந்தப் பேக்கை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

வேவு பார்த்த போது அணிந்த ஆடைகள்

இதனிடையே, மாடக்குளத்தில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிப் பகுதிக்கு ஆட்டோவில் சென்ற அவர், நகைக்கடைக்கு முன்பு வேவு பார்க்கச் சென்றபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் கொள்ளையின்போது பயன்படுத்திய உடைகள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டு எரித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நகைகளைப் பதுக்கிவைத்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் அங்கிருந்து சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்

பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர், நேற்று முன் தினம் மாலை நிஷாந்தின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தை சுரேஷிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பைக் யாருடையது?

இதற்கிடையே, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் யாருடையது என்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது, திருப்பாலை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தின் காதலி மீனாட்சிக்குச் சொந்தமான பைக் என்பது தெரியவந்தது. அந்தப் பைக்கைப் பயன்படுத்தித்தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எடுத்துச் சென்றதும் கண்டறியப்பட்டது.

நிஷாந்த் எங்கே?

தொடர்ந்து மூன்று நாட்களாக நிஷாந்தைத் தேடி வரும் காவல்துறையினர், பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் உதவியுடன் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவ்வப்போது செல்போனை அணைத்துவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+