அறிவுக் கடல்.. மதுரை கலைஞர் நூலகத்தில் வீட்டுக்கு புத்தகம் எடுத்து செல்வது எப்படி? எவ்வளவு கட்டணம்?
மதுரை: பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? எத்தனை புத்தகங்களை வாசிக்கலாம் என்ற விபரங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்த உடன், முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதை தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நூலக கட்டிடம் ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு புத்தகம், ரூ.218 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு, அறைகலன்கள் என ஒரே ஆண்டில் இந்த நூலகம் தயாரானது. 8 தளங்களை கொண்ட இந்த நூலக கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. தமிழ், ஆங்கில மொழி நூல்கள், வரலாறு, கணினி, மத்திய, மாநில அரசு, தொழில்நுட்பம், அறிவியல், , விண்வெளி, புவியியல், சட்டம், இலக்கியம், கலைபோட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்று உள்ளன.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே ஒரு பிரிவு, ஆய்வாளர்களுக்காக ஒரு பிரிவு, நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்காக ஒரு பிரிவு அரிய நூல்களுக்காக ஒரு பிரிவு, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரிவு, குழந்தைகளுக்கான ஒரு பிரிவு போன்றவை இதில் உள்ளன. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான நூல்கள் வீட்டில் பயன்படுத்துவதற்காகவும் வழங்கப்படுகிறது.
தனி நபருக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ரூ.100 ஆண்டு சந்தா தனியாக செலுத்த வேண்டும். இப்படி செலுத்தி 4 புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.150 மற்றும் ஆண்டு சந்தாவாக ரூ.75 என மொத்தம் ரூ.225 செலுத்த வேண்டும். இவர்கள் 5 புத்தகங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம்.
குடும்ப நபர்கள் பெற்றோர் 2 பேர், 2 குழந்தைகளுக்கான உறுப்பினர் கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஆண்டு சந்தாவாக ரூ 200 செலுத்த வேண்டும். இப்படி மொத்தம் 700 ரூபாய் செலுத்தினால் கலைஞர் நூலகத்தில் இருந்து 5 புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான உறுப்பினர் கட்டணம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ 50 என மொத்தம் ரூ 150 செலுத்தினால் போதும். 4 புத்தகங்கள் எடுத்துச் சென்று வாசிக்கலாம். https://www.kalaignarcentenarylibrary.org/p/membership.html என்ற லிங்கை கிளிக் செய்து உறுப்பினராக இணைந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications