மேலூர் தொகுதி.. பொதுத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் கட்சியின் தலித் வேட்பாளர்! தவெகவின் சைலண்ட் உதவி
மதுரை: மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கடைசி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஸ்வநாதன், அந்த கட்சிக்கு முதல் வெற்றியை பெற்று கொடுத்துள்ளார். இவரின் வெற்றிக்கு தவெக வேட்பாளர் மதுரைவீரன் பெற்ற வாக்குகளே காரணமாக மாறி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதற்கு முன்பாகவே, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்தது. இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசியாகவே வெளி வந்தது.

அப்போதும் கூட மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை அக்கட்சித் தலைமை அறிவிக்கவில்லை. இதையடுத்து வேட்புமனு தாக்கலுக்கு ஒருநாள் முன்பு, மேலூர் தொகுதி வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டார். மேலூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தது. இதனால் மேலூர் தொகுதியில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டவில்லை.
அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இருப்பினும் இந்த முறை விஸ்வநாதனுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் களத்தில் சிறப்பாக பணியாற்றினர். ஆனாலும் கருத்துக்கணிப்புகளில் மேலூர் தொகுதியில் அதிமுக வெல்லும் என்றே சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதியான மேலூரில், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமுள்ள பகுதியில், தலித் வேட்பாளர் வென்றிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு தவெகவும் சைலண்ட்டாக உதவி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெக வேட்பாளர் மதுரைவீரன் பெற்ற வாக்குகளே, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக அதிமுகவின் கோட்டையை காங்கிரஸ் கட்சி சிதறடித்திருப்பதாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications