உசிலம்பட்டி சிலிர்க்குது.. வெறும் ஆண்கள் "தலை".. ஜொலி ஜொலித்த ஜக்கம்மா கோயில்.. மக்களை ஈர்த்த மதுரை
மதுரை: வெறும் ஆண்கள் மட்டுமே பங்குபெற்ற உசிலம்பட்டி ஜக்கம்மாள் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. இந்த திருவிழாவின் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எருமார்பட்டி. இந்த ஊரிலுள்ள ஜக்கம்மா கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் தை மாதம் 2-ந் தேதி நடைபெறுவது வழக்கம்..
மாட்டுப்பொங்கல்: அதாவது மாட்டுப்பொங்கல் தினத்தன்று இந்த திருவிழா நடக்கும்.. இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்... ஆனால், பெண்கள் யாருமே கலந்து கொள்வது கிடையாது.

இந்த கோயிலுக்கென்று ஒரு சிறப்பு வரலாறு உள்ளது.. நாயக்கர்கள் காலத்தில், ஜோதில்நாயக்கனூர் ஜமீனை சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாவை பெண் கேட்டு சென்றார்களாம்.. ஜமீனை திருமணம் செய்ய மறுத்த ஜக்கம்மாள், மனமுடைந்து எருமார்பட்டி அருகே உள்ள மலை யிலிருந்து குதித்து இறந்து போய்விட்டார்.. அவரது உடலை இதே பகுதியிலிருக்கும் மயானத்திற்கு எருமார்பட்டியை சேர்ந்தவர்கள் எடுத்துவந்து எரியூட்டியிருக்கிறார்கள்.
ஜக்கம்மா: அதற்கு பிறகு, அவர் இங்கு தெய்வமாக இருப்பதாகவும், வருடந்தோறும் தான் இறந்த நாளில் வழிபாடு நடத்தும்படியும், தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்த ஜமீன், பூமியில் மலையளவு நெல் விளைந்தாலும் கடுகளவும் கொள்ளு விளையாது'' என்றும் ஜக்கம்மாள் அருள்வாக்கு சொல்லி உள்ளார்.. ஜக்கம்மா சொன்னதுபோலவே, வருடந்தோறும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
அவர் வாக்குப்படியே, இந்த பகுதியில் யாருமே கொள்ளு பயிரிடுவதும் இல்லை. கோயில் பகுதியில் சுடுகாடு இருந்ததால் பெண்கள் இந்த வழிபாட்டில் எப்போதுமே கலந்து கொள்வதுமில்லை.. ஆண்களுடன், சிறுமிகள் கலந்து கொள்வார்கள்.
ஜக்கம்மாள் சிலை: இந்த விழாவின்போது, வாகை மரத்தின் அடியிலுள்ள ஜக்கம்மா சிலைக்கும், மரத்திற்கும் பக்தர்கள் வெள்ளைத்துணியை கொண்டுவந்து போர்த்துவார்கள்.. தேங்காய் பழம், வழிபாட்டு பொருட்களை வைத்து அலங்காரம் செய்து வழிபாடும் செய்வார்கள்..
அந்தவகையில், நேற்றையதினம் மாட்டுப்பொங்கல் தினத்தன்று இந்த விழா கொண்டாடப்பட்டது.. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், முத்து குடைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேர்த்திக் கடனுக்காக தேங்காய், பழம் தட்டுடன் வெள்ளைத்துணி, பட்டாடை கொண்டு வந்து வழிபட்டனர்.. தேங்காய்களை பூசாரிகள் உடைத்து ஜக்கம்மாளுக்கு அபிஷேகமும் செய்தனர்.
தேங்காய்கள்: பூஜை முடிந்த பிறகு, இப்படி ஒவ்வொரு தட்டிலும் உள்ள தேங்காய்களை பூசாரிகள் உடைத்து தருவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அதேபோல, இந்த விழாவில் எருமார்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து ஜக்கம்மாள் கோவில்முன்பு கொண்டுவந்து நிறுத்தி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது..
காலம் காலமாக பெண்கள் பங்கேற்காமல், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழாவானது, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி, பக்தர்களை பரவசமூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications