தவெகவினரை சீரியஸாக எடுத்து கொள்ளாதீங்க.. விஜய் பிரதமர் வேட்பாளரா? முடித்துவிட்ட மாணிக்கம் தாகூர்
மதுரை: ''தவெக அமைச்சர்கள் அனைவரும் விஜய் தான் அடுத்த பிரதமர், வருங்கால பிரதமர்னு பேசுறாங்களே'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ''நான் வரும்போது கூட என்னை பார்த்து ஒருவர் பிரதமர் ஆகணும்.. மத்திய அமைச்சர் ஆகணும்னு சொன்னாரு. அதனால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவை ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சிகளின் முகம். தவெக தொண்டர்களின் கோஷங்களுக்கு பதில் சொன்னால் நாள் முழுவதும் பதில் சொல்லலாம்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர், ''காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் தவெக அமைச்சர்கள் அனைவரும் விஜய் தான் அடுத்த பிரதமர், வருங்கால பிரதமர்னு பேசுறாங்க. இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மாணிக்கம் தாகூர், ''நான் வரும்போது கூட என்னை பார்த்து ஒருவர் பிரதமர் ஆகணும்.. மத்திய அமைச்சர் ஆகணும்னு சொன்னாரு. அதனால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள்.. காங்கிரஸை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி தான் கட்சியின் முகம், எதிர்க்கட்சிகளின் முகம்.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த கூட்டணியின் முகம் விஜய். அவர்களது தலைமையில் நல்லாட்சி அமைய முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது. அதனால் தொண்டர்களின் கோஷங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தோம் என்றால் இன்று முழுவதும் பதில் சொல்ல வேண்டியது தான். அதைவிட முக்கியமான விஷயம் உள்ளது'' என்றார். இதையடுத்து அந்த பத்திரிகையாளர், ''சார் தொண்டர்கள் சொல்லவில்லை. அமைச்சர்கள் தான் சொன்னார்கள்'' என்றார். அதற்கு மாணிக்கம் தாகூர், ''நான் அவர்களை தொண்டர்களாக தான் பார்க்கிறேன்'' என்றார்.
முன்னதாக தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர், ''தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களும், பார்லிமென்டில் ஓட்டளிக்க வேண்டும். இந்த மசோதா கொண்டு வரப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களை போல், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும். லோக்சபா தொகுதிகளை, 50 சதவீதம் அதிகரித்து தருவதாக கூறினாலும், தமிழகத்திற்கு பாதிப்புதான் ஏற்படும்.
தொகுதி மறுவரையறையால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட ஐந்து, ஆறு மாநிலங்களில் வெற்றி பெற்றாலே, பிரதமர் ஆகிவிட முடியும். இதனால், தென் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும்; அதை தடுக்க வேண்டும். தற்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்''என்று கூறினார். முதல்வர் விஜய்யை மனதில் வைத்து ஆதவ் அர்ஜூனா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் மாணிக்கம் தாகூர் தவெகவை சீண்டும் வகையில் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து ''தமிழக எம்எல்ஏக்களுக்கு கார் - உதவியாளர் சம்பளம் வழங்கும் அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாணிக்கம் தாகூர், ''ஊழல் செய்யாத சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். லஞ்சம் வாங்காத சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். கவுன்சிலர்களை உருவாக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சம்பளத்தை அதிகமாக கொடுக்க வேண்டும். அப்போது தான் லஞ்சம் வாங்காமல் இருப்பார்கள். டாஸ்மாக்கில் காசு வசூலிக்காமல் இருப்பார்கள். கல், மண்ணை எடுத்து வீடு கட்டாமல் இருப்பதற்கு இது வழிவகுக்கும். அந்த வகையில் உரிய வசதிகளை தமிழக அரசு செய்தி கொடுத்திருந்தால் வரவேற்கத்தக்கது'' என்று பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications
