கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்.. வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது! உயர் நீதிமன்ற மதுரை கிளை

Subscribe to Oneindia Tamil

மதுரை: கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய நபர்கள் பட்டியலின சமூகத்திற்கான அந்தஸ்தையும், அதனுடன் தொடர்புடைய சட்டப் பாதுகாப்புகளையும் இழக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், மதம் மாறியவர்கள் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

christian

வழக்கின் பின்னணி என்ன?

தேனி மாவட்டம் தென்கரையைச் சேர்ந்தவர் ரவிகுமார். உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், தான் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதாகவும், பழிவாங்கும் நோக்கில் வேறு ஒரு கல்வி நிறுவனத்திற்கு நிர்வாகம் தன்னை பணியிட மாற்றம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

தான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்ட ரவிகுமார், பள்ளித் தாளாளர், பொருளாளர் மற்றும் முதல்வர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் அம்பலமான உண்மை

இந்த மனு நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆவணப்பூர்வமான முக்கிய ஆதாரங்களை முன்வைத்தனர். அதில், மனுதாரர் ரவிகுமார் கடந்த 2015-ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்று தீவிரமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்பது தெரியவந்தது.

மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய விவகாரத்தை நீதிமன்றத்தில் உள்நோக்கத்துடன் மறைத்துவிட்டு, தன்னை இந்து ஆதிதிராவிடர் என்று கூறி இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் வாதிட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசியல் சாசன விதிகள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல். விக்டோரியா கௌரி, ரவிகுமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டதாவது, ஒரு நபர் பிறிதொரு மதத்திற்கு மாறி, அந்த மதத்தின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் போது, அவர் பட்டியலின சமூகத்திற்குரிய சலுகைகளையும் சட்டப் பாதுகாப்புகளையும் கோர முடியாது. 1950-ஆம் ஆண்டின் அரசியல் சாசன ஆணையின்படி (Constitution Scheduled Castes Order of 1950), இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலின சமூகப் பிரிவினராக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக, கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய மனுதாரருக்கு பட்டியலின வகுப்பினருக்கான சிறப்பு சட்டப் பாதுகாப்புகளோ அல்லது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரும் தகுதியோ சட்டப்படி இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்டப் பாதுகாப்பும் உரிமை வரம்பும்

எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனினும், ஒரு நபர் சமத்துவம் அல்லது பிற காரணங்களுக்காக கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களுக்கு மாறும்போது, அவர் பட்டியலின வகுப்பிற்குரிய சட்டப்படியான அடையாளத்தை இழக்கிறார் என்பதை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற முந்தைய தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

மதமாற்றத்தை மறைத்து சட்டப் பாதுகாப்பைப் பெற முயன்ற மனுதாரரின் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்தினர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+