பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. காவிரி டெல்டாவில் மணல் குவாரி கூடாது! அதிரடியாக உத்தரவிட்ட ஹைகோர்ட்
மதுரை: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை தொடர்ந்து அனுமதித்தால் வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு,
மணல் குவாரிக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலிக்கக்கூடாது எனவும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் எக்காரணம் கொண்டும் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சை ராயமுண்டன்பட்டியைச் சேர்ந்த ஜீவகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா அறிவிக்கபட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் விதி உள்ளது.
காவிரி டெல்டா
ஆனால், திருவையாறு தாலுகாவில் உள்ள அச்சனூர், மருவூர், கடுவெளி, மணத்திட்டை, பூதலூர் தாலுகாவில் உள்ள மாரனேரி, புத்தூர், புதுக்கரி வாரம்பாடை, கழமங்கலம், ஓரத்தூர், விண்ணமங்கலம், கல்வடி, பெரும்புலியூர் மற்றும் சுற்றியுள்ள இடங்ளில் பல சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் இப்பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. எனவே டெல்டா பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், புதியதாக குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, " காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை தொடர்ந்து அனுமதித்தால் வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். டெல்டா பகுதியில் குவாரி பணிகளை தொடர அனுமதித்தால் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்படும்" என வாதிட்டார்.
மணல் குவாரி
பின்னர் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், "இந்த பகுதியில் 4,40,335 கன மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. 2016-2020-ம் ஆண்டு வரையிலும், 2021-ம் ஆண்டில் சில மாதங்கள் வரையிலும் மாட்டு வண்டிகள் மூலம் 857.2 கன மீட்டரும், லாரிகள் மூலம் 1,52,724 கன மீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளது. மேலும், 2023 முதல் அதன் பிறகு குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. அனுமதிக்கப்பட்ட மொத்த அளவான 4,40,335 கன மீட்டர் மணல் முழுமையாக அள்ளப்படவில்லை" என கூறப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்," இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இனி மணல் குவாரி நடத்தாமல் இருப்பதுதான் நல்லது. இந்த கிராமங்களில் குவாரி பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் இப்பகுதிகளில் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக் கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Click it and Unblock the Notifications
