'2 உடைந்த கேரம் போர்டுகளுடன்'.. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது விற்பனை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அதேநேரம் தனியார் மதுக்கடைகள் என்பது பெரிய பார்கள், நட்சத்திர விடுதிகளாகவே இருந்தன. ஆனால் இன்று மனமகிழ் மன்றங்கள் பெயரில் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் இரண்டு உடைந்து போன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் சாதாரண மதுக்கடைகளின் எண்ணிக்கைக்கு நிகராக, எப்.எல். 2 என்றழைக்கப்படும் மனமகிழ் மன்ற மதுக்கூடங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த கடைகளுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு என்ன வித்தியாசம் என்றால், இது தனியார் நடத்துவது.. அது அரசு நடத்துவது அவ்வளவு தான். அதேபோல் மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விலை சற்று தான் கூடுதலாக இருக்கும். ஆனால் அங்கு அதற்கு பதில் தண்ணீர் உள்பட சில பொருட்களை தருவார்கள்..

டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றம் என இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று குடிமகன்கள் கூறுகிறார்கள். இந்த மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் இயங்கும் மதுக்கடைகள் டாஸ்மாக் கடைகள் திறக்க ஒரு மணி நேரம் முன்பு திறக்கப்படும். டாஸ்மாக் கடை மூடிய பின்னர் ஒரு மணி நேரம் செயல்படும்.. அதாவது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுகிறது. இந்த மனமகிழ் மன்றங்கள் எண்ணிக்கை சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுபற்றி வழக்குகளும் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறுகையில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருக்கிறார். மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதியாக இருக்கிறது. . வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது.
இந்த தூரக்கட்டுப்பாடு விதிகள் எதையும் அவர்கள் பின்பற்றப்படவில்லை. எனவே, விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், அந்த இடத்தில் எதிர்காலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" இவ்வாறு முத்துசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் கூறுகையில், "மனமகிழ் மன்றங்கள் அமைக்க எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகிறது? இரண்டு உடைந்துபோன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது. மனமகிழ் மன்றம் எந்த விதியில் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது?
பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் சட்ட திட்டங்கள் என்ன? அந்த மனமகிழ் மன்றங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா? மனமகிழ் மன்றங்களை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா?. இதற்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் கலால் அதிகாரிகள், டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்கள்.












Click it and Unblock the Notifications