சுத்தபத்தமா தானே இருக்கு..கறிக் கூடங்களுக்கு கடும் கட்டுப்பாடு! ’இது’ இல்லைனா.. அனுமதி வழங்கக்கூடாது
மதுரை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறைச்சிக் கூடங்கள் அமைக்கக்கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து இறைச்சிக்கூடங்களும் நிபந்தனை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் இறைச்சிக் கூடம் அமைக்க தடை கோரி தென் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறைச்சிக் கூடங்கள் அமைக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கடையநல்லூர் நகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்டபானி, திலிப்குமார் அமர்வு, "தமிழகத்தில் இறைச்சிக் கூடங்கள் அமைப்பது தொடர்பாக ஒரே மாதிரியான திட்டம் இல்லை என்பது தெரிகிறது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இறைச்சிக் கூடங்களை அமைத்தல், இயக்குதல், கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கான ஒரே மாதிரியான கட்டமைப்பு உருவாக்கும் பணி நடைபெறுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இறைச்சிக்கூடங்களை இயக்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளுக்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கூடங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்கிறது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை மாநிலம் முழுவதும் முறையாக அமல்படுத்த வேண்டும். அதுவரை நிபந்தனைகள்படி அமைக்கப்படாத இறைச்சிக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அனைத்து இறைச்சிக்கூடங்களும் நிபந்தனை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மனு முடிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.



Click it and Unblock the Notifications
