மதுரை அருகே 100 சேவல்கள் பலி.. ஆடி படையல் விழாவில் ஆண்கள் மட்டும் ஏன் பங்கேற்கிறார்கள்?
மதுரை: மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி மங்களாம்பட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத ஆடிப் படையல் திருவிழா நடைபெற்ற.. இங்கு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் 100-க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.. இந்த ஆடிப்படையல் திருவிழாவின் வியப்பூட்டும் பின்னணி குறித்து பார்ப்போம்..!!
ஆன்மீகமும் நம்பிக்கைகளும் நிறைந்ததுதான் நம்முடைய தமிழக கிராமங்கள்.. இங்கு ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் பாரம்பரியமும் உள்ளது..

மதுரை மேலூர் கொட்டாம்பட்டி மங்களாம்பட்டி
அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி மங்களாம்பட்டி கிராமத்திலும், காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வினோத திருவிழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள காவல் தெய்வமான மதுரை வீரன் சுவாமிக்கு, மழை வேண்டி நடத்தப்படும் ஆடிப்படையல் திருவிழா தான் அது.
சாதி, சமய பேதங்களைக் கடந்து சுற்றுவட்டார கிராம மக்கள் எல்லாருமே ஒன்றுசேர்ந்து இந்த விழாவை காலம் காலமாக நடத்தி வருகிறார்கள்.. ஆனாலி, முக்கிய நிகழ்வான சமையல் மற்றும் அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை வீரன் சுவாமி
அந்தவகையில், இந்த வருடத்துக்கான ஆடிப் படையல் திருவிழா நேற்று மங்களாம்பட்டி கிராமத்தில் அமர்க்களமாக ஆரம்பமானது. மங்களாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது குடும்ப நலனுக்காகவும், விவசாய செழிப்புக்காகவும் மதுரை வீரன் சுவாமியிடம் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறியதையடுத்து, இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
தங்கள் வேண்டுதல் பலித்ததற்கு நன்றிக்கடனாக100-க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாகக் கொண்டு வந்திருந்தனர். முன்னதாக, அங்குள்ள மரத்தின் அடியில் வீற்றிருக்கும் காவல் தெய்வம் மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு கோயில் பூசாரிகளால் பக்தர்கள் கொண்டு வந்த 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
இறுதியாக, சமையல் பணிகள் ஆரம்பமாகின.. பலியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள், பெரிய பெரிய பாத்திரங்களில் கொட்டப்பட்டு, சேவல் கறியுடன் மொச்சை பயறு கலந்து பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்டது. இந்த சமையல் பணி முழுவதையும் ஆண்கள் மட்டுமே முன்னின்று சமைத்தார்கள்..
அன்னதானத்தில் பிரசாதம்
சமையல் முடிந்ததும், மதுரை வீரன் சுவாமிக்கு அந்தச் சுடச்சுட சேவல் கறி மற்றும் மொச்சை பயறு சாதம் படையலிடப்பட்டது. அதன்பிறகு, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வாழை இலை போட்டு அந்த உணவு பிரசாதமாக பரிமாறப்பட்டது. இந்த அன்னதானத்தில் சாதி, மத வேறுபாடின்றி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் வரிசையாக உட்கார்ந்து, மிகுந்த பக்தி சிரத்தையுடன் உணவை உட்கொண்டனர்.
இந்த விழாவின் பாரம்பரிய விதியின்படி, பெண்களுக்கு மதுரை வீரன் சுவாமியை வணங்குவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் மட்டுமே முழு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆடிப்படையல் விழாவின் சமையல் பணிகளிலோ அல்லது அன்னதான உணவு தயாரிப்பிலோ அவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் கிடையாது.
சமைக்கப்பட்ட சேவல் கறி
அதேபோல், சமைக்கப்பட்ட சேவல் கறி உணவை சாப்பிடுவதற்கும் பெண்களுக்கு அனுமதி கிடையாது.. அதனால் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த பெண் பக்தர்கள், அங்கிருந்து உடனடியாக தங்களது வீடுகளுக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.. இருந்தாலும், விழாவிற்கு வரும் பெண் பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடாகக் கோயிலில் "பொறி" மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆண்கள் மட்டுமே சமைத்து, ஆண்கள் மட்டுமே சாப்பிடும் இந்த வினோத வழிபாட்டு முறையை மங்களாம்பட்டி கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா
இப்படி பாரம்பரிய முறைப்படி ஆடிப்படையலிட்டு மதுரை வீரன் சுவாமியை வழிப்பட்டால், தங்களது கிராமத்தில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழித்து, வாழ்வாதாரம் உயரும் என்பது இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது.
இதில் ஆச்சரியமான ட்விஸ்ட் என்னவென்றால், நேற்று இந்த வினோத திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த பகுதியில் சாரல் மழை பெய்ய துவங்கிவிட்டதாம்.. தங்களது வேண்டுதலை ஏற்று மதுரை வீரன் சுவாமியே மழையாகப் பொழிகிறார் என்று எண்ணிய கிராம மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றார்கள்...!!


Click it and Unblock the Notifications
